சென்னை, அக். 9-–
நடிகர் சூரியிடம் நில வாங்கி தருவதாக ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக விஷ்ணு விஷாலின் தந்தை மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ்த்திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூரி (வயது 40). அந்த படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் கதாபாத்திரத்தில் நடித்ததால் அவர் பெயர் பரோட்டா சூரி ஆனது. வெண்ணிலா கபடிகுழு படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விசாலின் தந்தை முன்னாள் டிஜிபி ரமேஷ்குடவாலா சூரிக்கு அறிமுகமாகியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். ரமேஷ்குடவாலாவும், அன்புவேல் ராஜனும் தயாரிக்கும் வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்த சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கியை தரவில்லை என தெரிகிறது. அதற்குப் பதிலாக நிலம் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
அதன்படி அன்புவேல் ராஜன் சிறுசேரியில் உள்ள நிலத்தை சூரியின் பெயரில் பதிவு செய்வதற்கு பல தவணையாக 3 கோடியே லட்சத்து 15 ஆயிரம் வரை சூரியிடம் பெற்றுள்ளார். அந்த நிலம் தொடர்பாக விசாரித்ததில் அந்த இடத்திற்கு அன்புவேல் ராஜனிடம் சரியான ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. அதனையடுத்து தான் கொடுத்த பணத்தை சூரி திரும்ப கேட்டுள்ளார். அதன்பேரில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் பணத்தை திருப்பித் தருவதாக அன்புவேல் ராஜன் ஒப்பந்தம் போட்டுக் கொடுத்துள்ளார். அதன்படி சிறிய தொகையை மட்டும் அன்புவேல் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகை ரூ. 2 கோடியே 69 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாயை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
அது தொடர்பாக நடிகர் சூரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் சென்னை அடையாறு காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் சூரி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் சூரி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அடையாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் போலீசார் ரமேஷ், அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது 420 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மோசடி பரிவர்த்தனை ரூ. 50 லட்சத்தை தாண்டியதால் இந்த வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.