சினிமா

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா

Spread the love

டைட்டில்: ‘83’; டைரக்டர் : கபீர்கான்

கிரிக்கெட் இந்திய தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரையும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. இங்கே கிரிக்கெட் வீரர்கள் இளைஞர்கள் பலரின் ஆதர்ஷம். கிரிக்கெட்டை இளைஞர்களிடம் சிறுவர்களிடம் கொண்டு போவதில் பல முன்னணி வீரர்கள் இந்தியாவின் அடையாளமாய் இருக்கிறார்கள்.

அப்படி தமிழகத்திற்கு ஒரு அடையாளமாய் இங்கே கிரிக்கெட்டை பரப்பிய ஆளுமைகளுள் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் மிக முக்கியமானவர். தனது தனித்த திறமையாலும், ஸ்டைலான ஆட்டத்தாலும் பலரையும் கவர்ந்தவர்.

1983 உலககோப்பை வாங்கிய அணியில் பெரும் பங்கு வகித்தவர். இப்போது இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, உலககோப்பை வென்ற கதையை சொல்லும் “83” படத்தில் ஶ்ரீகாந்தாக அவதாரமெடுத்துள்ளார் நடிகர் ஜீவா.

“83” திரைப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் 2020 ஏப்ரல் 20 அன்று வெளியாகிறது.

நடிகர் ஜீவா பற்றி இயக்குநர் கபீர்கான் பேசுகையில், ‘முதலில் இந்தப்படத்திற்காக கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தை பற்றி யோசித்தபோது அவரது துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் தான் மனதின் முன் வந்து நின்றது. அவர் தனி ஒரு பேட்டிங் ஸ்டைல் கொண்டிருந்தாலும், அவரது விளையாட்டையும் தாண்டி அவரது சுறுசுறுப்பான குணம் அவரை எல்லோரிடத்திலும் பிரபலமாக வைத்திருந்தது என்றார்.

1983 உலககோப்பையை மையமாக வைத்து படத்தை உருவாக்க ஆரம்பித்த போது அணியில் பங்கு பெற்ற ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமாக இருந்தோம். கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் கேரக்டரை செய்வதற்கு அவரைப்போலவே சுறுசுறுப்பும் திறமையும் நிறைந்த ஒருவரை தேடினோம். ஜீவாவின் சில படங்களை பார்த்தபோது இவர்தான் பொருத்தமானவர் என மொத்தக்குழுவும் சேர்ந்து முடிவு செய்தோம். அனைவரையும் கவர்ந்தவராக ஜீவா இருந்தார். மேலும் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது படத்திற்கு இன்னும் பெரிய பலமாக இருந்தது என்று கூறினார்.

என்ன தான் அவர் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் பேட்டிங் ஸ்டைலை தன்னுள் கொண்டு வர, ஜீவா நிறைய பயிற்சி மேற்கொண்டார். படத்தில் அவரை ஜீவா தத்ரூபமாக பிரதிபலித்துள்ளார். படத்தை பார்க்கும் போது ரசிகர்களை கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்துவார் என்றார் அவர்.

தனது கதாப்பாத்திரம் குறித்து நடிகர் ஜீவா பேசுகையில்,

‘கிரிக்கெட் சிறுவயது முதலே எனக்கு மிகவும் விருப்பமான விளையாட்டு. 1983 படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரம் என்னை தேடி வந்த போது நான் மகிழ்ச்சியில் வாயடைத்து போனேன். வாழ்வில் இரண்டு லட்சியங்கள் ஒருசேர நிறைவேறாது என்பது என் வாழ்வில் பொய்த்துவிட்டது. நடிகனாக ஆன பிறகு எனக்கு மிகப்பிடித்த கிரிகெட் வீரரை திரையில் பிரதிபலிப்பதை விட பெரிய மகிழ்ச்சி வேறென்ன இருந்து விட முடியும்.

கிரிக்கெட்டை தமிழக வீதிகள் தோறும் அறிமுகப்படுத்திய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் பாத்திரத்தை ஏற்று நடிப்பது என் வாழ்வின் வரம், என்னை இந்த கதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் கபீர்கானுக்கும் அவரது குழுவினருக்கும் மிகப்பெரும் நன்றி என்றார்.

மேலும் இக்கதாப்பாத்திரத்திற்கு தயாரவதற்கு நிறைய அவகாசம் தந்து, என்னை சரியாக நடிக்க வைத்துள்ளார்கள். இந்தியாவின் மிகத் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்குடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். ரசிகர்கள் இப்படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை பார்க்க மிகுந்த ஆவலாக இருக்கிறேன் என்று கூறினார்.

4 தசாப்தமாக கிரிக்கட்டை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் பெருவிருந்தாக இருக்கும். 83–ம் ஆண்டு காலகட்டத்தில் உலககோப்பையை வென்ற போட்டியை பார்த்தவர்களுக்கு இப்படம் பல மலரும் நினைவுகளை உண்டாக்கும். அந்த காலகட்டத்தில் அதனை பார்த்து ரசிக்காதவர்களுக்கு இப்படம் தத்ரூபமாக அவர்கள் கண்முன் அந்த தருணத்தை கொண்டு வரும்.

மொத்தத்தில் இப்படம் இந்தியா முழுதுமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *