தமிழகம் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளால் நாட்டிற்கே நல்ல முன்னுதாரணமாக இருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் உன்னத நடப்பாகும்.
பல்வேறு துறைகள் சரிவை சந்தித்து முடங்கி விட்டாலும் அவற்றை நெம்பி நிலை நிறுத்த உதவும் ஓர் ஆயுதம் கல்வியாகும்.
அதை உணர்ந்தே தமிழகம் நடைபோடுகிறது .

2020–ல் ஆரம்ப சில வாரங்கள் மட்டுமே பள்ளிகளும் கல்லூரி வளாகங்களும் இயங்க முடிந்தது. மார்ச் மாதம் வந்துவிட்டால் இறுதிப் பரீட்சை பரபரப்பு எல்லா இல்லங்களிலும் இருக்கும். ஆனால் இம்முறை கூடவே கொரோனா பெரும் தோற்று புதிய கிலியை எல்லா இடங்களிலும் ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் மத்திய அரசால் உரிய நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் வரும் முன்பே தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா திமுக அரசு கல்விக்கூடங்களை மூடிவிட்டு மாணவர்களை வீட்டில் பத்திரமாக இருக்க வைத்தது.
முதன் முதலில் முழு ஊரடங்கை அறிவித்தது தமிழகம் தான்! ஒரு நாள் மட்டும் என்று மத்திய அரசு அறிவித்த நாளில் அதைத் தமிழகம் வரவேற்று ஏற்றது. கூடவே 14 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் முதல் வாரம் வரை பள்ளிகள், கேளிக்கை மையங்கள் மூடல் என்று அறிவித்தது.
பிரதமர் மோடியும் முதல்வர் பழனிசாமியை அழைத்து தமிழகத்தில் எடுக்கப்பட்டு வந்த அனைத்து கொரோனா தொற்று நடவடிக்கைகளையும் மனம் திறந்து பாராட்டினார்.
சர்வதேச பயணிகளை கண்காணித்து, பரிசோதனைகள் செய்து கொரோனா தொற்றை ஆரம்பம் முதலே விமான நிலையங்களில் தடுத்ததையும் பாராட்டினார்.
ஆக ஆரம்பம் முதலே கொரோனா தொற்று மீதான போரை ஓர் இயக்கமாகவே தமிழகத்தில் நடத்திய பெருமை பழனிசாமி தலைமையிலான மந்திரி சபைக்கு உண்டு.
பிறகு நாடே பல மாதங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவால் முடங்கியது. இதனால் எல்லா துறைகளிலும் தேக்கம் ஏற்பட்டு பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது.
இதே பாதிப்பு தமிழகத்திலும் இருந்தாலும் ஏழைகளுக்கும் நிரந்தர கூரையின்றி தவிக்கும் பல்லாயிரம் தினக்கூலி பணியாளர்களுக்கும் மூன்று வேளை உணவை அம்மா உணவகங்களில் வழங்கவும் உத்தரவிட்டார்.
இப்படி பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தபோது கல்வியின் சிறப்பை உணர்ந்து மாணவர்களின் வருங்கால நலனுக்கு முக்கியத்துவம் தந்து படிப்பு பாதிக்கக் கூடாது என்பதையும் தமிழகத்தில் உறுதி செய்தார்.
பாடம் சொல்லித் தருவது முதல் பரீட்சைகள் எழுதுவது வரை நடைபெறவே முடியாத நிலை உருவானதைக் கண்டு தளர்ந்து விடாமல் நவீனயுக டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை கையிலெடுத்து எல்லாத் தரப்பு மாணவர்களையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நடப்புக் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இணைய வழியில் நடத்தப்பட்டன. இணையவழி வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட் போன் அல்லது கணினி அவசியம் என்பதால் பல ஏழைக் குடும்பங்களுக்கு பொருளாதாரச் சுமை அதிகரித்தது. பல குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கான பாடங்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின.
பள்ளிகளில் பொதுத் தேர்வுகள், கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இறுதித் தேர்வுகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டாலும் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவு, தகுதித் தேர்வுகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தமிழகத்தில் ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர். அதேநேரம் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றார்கள். முதல்முறையாக தமிழகத்தின் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் தேசிய தேர்ச்சி விகிதத்தைவிட (56.44) அதிகமாக இருந்தது.
தமிழக மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது. ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் முடிவு நடைமுறைக்கு வந்தது.
கல்வியில் மிகவும் முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது.கொரோனா பெருந்தொற்றின் வீரியம் குறைந்து வந்தாலும் சமீபத்தில் ஐஐடி வளாகத்தில் 190 மாணவனுக்கு தொற்று உறுதியானது அதிர்ச்சியை தருகிறது. மாணவர்களால் இந்த நோயின் தாக்கீட்டை சமாளித்து விட முடியும். ஆனால் அவர்கள் இல்லங்களில் உள்ள முதியோர்களின் நிலைதான் பரிதாபத்துக்கு உரியது.
ஆகவே தான் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் விலகி வந்தாலும் தமிழக அரசு மிக கவனமாக நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
2020–ல் தமிழகம் கல்வித்துறையில் சாதித்து முன்னேறி இருப்பதை நாடு பாராட்டுகிறது.