நாடும் நடப்பும்

விபத்தில்லா திருப்பத்தூர்: சபாஷ் எஸ்.பி. விஜயகுமார்

இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு காவல்துறைக்கு சவாலாக இருக்கும் குற்றங்கள், அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்க முடியும் என்பதை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் நிரூபித்துள்ளார்.

அவரது முன்மாதிரியான நடவடிக்கை தமிழகமெங்கும் காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய ஒன்று. அதுமட்டுமின்றி தமிழக அரசு இப்படிப்பட்ட முறையை எல்லாத் துறைகளிலும் அறிமுகப்படுத்த யோசிக்கலாம்.

திருப்பத்தூரில் அடுத்தடுத்து விபத்துக்கள் இவ்வாண்டு துவக்கத்தில் ஏற்பட அதைப்பற்றி பலர் சமூக வலைதளங்களில் விவாதிப்பதையும் விஜயகுமார் பார்வைக்கு வந்தது. அவர்கள் கூறும் பல கருத்துக்கள் நல்ல ஆலோசனைகளாக தோன்ற அவர்களிடமே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கருத்து கேட்டாராம். மேலும் ஒரு வாட்ஸ்அப் எண்ணை அறிவித்து அதிலும் நேரடியாக கருத்துக்கள் தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் தந்த பல்வேறு ஆலோசனைகளை தனது அதிகாரிகளிடமும் விவாதித்து அதில் இருந்து புதிய திட்டம் ஒன்றை விஜயகுமார் உருவாக்கியும் உள்ளார்.

அதன்படி விபத்துப் பகுதிகளை குறியீடு செய்தும் நெரிசல் பகுதிகளை அடையாளம் கண்டும் கூகுள் மேப்ஸ் உதவியுடன் விபத்துப்பகுதி வரைபடம் ஒன்றை தயார் செய்தும் விட்டார்.

எப்போதெல்லாம் சாலை நெரிசல் அதிகரிக்கிறது. லாரி போக்குவரத்து வேகமாக நகர்கிறது போன்ற பல்வேறு தகவல்களை கண்ட்ரோல் அறையில் இருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது.

மேலும் திருட்டு சம்பவம், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் ஓட்டுனர்களைக் கண்காணிக்கவும் இந்த நவீன வரைபடம் உதவி வருகிறதாம்.

இப்படி முன்கூட்டியே கண்காணிக்க வரைபடம் தயார் செய்வத ‘ G e o s p a t i a l m a r k i n g’ என்று கூறப் படுகிறது.

இப்படித் தயாராகும் வரைபடத்தின் உதவியால் வாராவாரம் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்து அறிக்கையைத் துல்லியமாக பெற்று விபத்தில்லா பகுதியாக மாற்றி வருகிறார் விஜயகுமார்.

இத்தகைய தீவிரக் கண்காணிப்பால் குற்றங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தும் வருகிறதாம்.

இதை தமிழக டிஜிபி முழுமையாக ஆராய்ந்து தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இப்படி நவீன கணினி யுக புரட்சியில் காவல்துறை செயல்பாடுகளை மேம்படச் செய்தாக வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர்களை பணியிட பயிற்சியாக தேவைப்படும் பணிகளை உடனடியாக செய்திட முடியும்.

கூகுள் மேப்ஸ் என்பது பயன்படுத்துவோரின் தகவல் அடிப்படையினால் மட்டுமே செயல்படும் சாப்ட்வேர் ஆகும்! அதுபோன்றே நமது காவல்துறை செயல்பாடுகளும் மக்களின் சேவை எதிர்பார்ப்பு, தரும் தகவல்களைக் கொண்டு கணினி வரைபடத் தயாரிப்பால் விபத்தில்லா தமிழகத்தையும் குற்றங்களே இல்லாத தமிழகத்தையும் நிரந்தரமாக உருவாக்கி விடமுடியும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல் என்னவென்றால் சமூக ஆர்வலர்களின் தகவல் பகிர்வைத் தவிர வேறு எந்த செலவும் கிடையாது!

விபத்துக்கள் காப்பீடு நிறுவனங்களுக்கு தான் பெரிய செலவாகும். அவர்களே ஒரு சிறு தொகையை முதலீடாக தந்துவிட்டால் இப்படி ஒரு நவீன முயற்சியை சிறப்பாகவே தமிழகஅரசு காவல்துறை மூலம் செய்துவிடமுடியும்.

அந்த நவீன முயற்சியை விபத்துக்கள் காப்பீடு நிறுவனங்கள் செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *