சிலருக்கு சில சமயங்களில் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் . பல சமயங்களில் அது சரியான அளவிலும் இருக்கும் . ரத்தக்கொதிப்புக்கு மாத்திரை சாப்பிடலாமா? வேண்டுமா? விபரங்களுக்கு தொடர்ந்து படியுங்கள்.
உடலில் ரத்த அழுத்தம் எப்போதும் ஒரே அளவாக இருக்காது; மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும்போது உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்திருக்கும்போது எடுக்கப்படும் ரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு ரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ குறைந்தோ காணப்படும்.
உதாரணமாக, இது உறங்கும்போது சற்றுக் குறைந்தும் உணர்ச்சிவசப்படும்போது மிக உயர்ந்தும் காலை நேரத்தில் இயல்பாகவும் மாலை நேரத்தில் சிறிது உயர்ந்தும் காணப்படும். இது தற்காலிக மாற்றமேயாகும்.
உடல் ஓய்வு கொள்ளும்போது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஆகவே ஒருவருக்கு முதல்முறையாக ரத்த அழுத்தத்தை அளக்கும்போது, ஒரே ஒரு முறை மட்டும் அளந்துவிட்டு, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது.
மருத்துவர்கள், ஒருவருடைய உண்மையான ரத்த அழுத்தத்தை அறிந்துகொள்ள, தொடர்ந்து சில நாட்களுக்கு 5 அல்லது 6 முறை அளக்கிறார்கள். அவற்றில் 3 அல்லது 4 அளவுகள் 140 / 90 – க்கு மேல் இருந்தால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கிறார்கள்.
ரத்த அழுத்தம்140 / 90 -க்கு கீழ் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இல்லை என்று அர்த்தம்.
நீங்கள் அவ்வப்போது ரத்த அழுத்தத்தை அளப்பதைவிட ஒரு வாரம் தொடர்ந்து அளந்து முடிவு செய்வது நல்லது.