ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்
இந்த திருத்தலத்தில் வாழ்ந்த சித்தர்கள் சிலர், மதுரை சுந்தரேஸ்வரர் மீது பக்தி கொண்டு இருந்தனர். அவர்கள் தவமிருந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருப்பதை கண்டனர். அதையே சுந்தரேஸ்வரர் உருவில் வைத்து வழிபடத் தொடங்கினர்.
பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டு மீனாட்சி அம்மனுக்கும் சன்னதி அமைக்கப்பட்டது. சித்தர்கள் தனக்கென வீடு வாசல் இல்லாத ஆண்டிகள் என்பதால், இந்தப் பகுதிக்கு ஆண்டிப்பட்டி என்ற பெயர் உண்டானது என்கின்றனர் .
7 நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்த இந்தக் கோவிலில் சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. சூரியனும் சந்திரனும் அருகருகே இங்கு உள்ள அமாவாசை மட்டுமல்லாது ஆண்டில் எல்லா நாட்களிலும் பிதுர் தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபடுகின்றனர். அம்மன் சன்னதிக்கு நடுவில் முருகப்பெருமானுக்கு சன்னதி இருப்பதால் இந்த கோவில் சோமாஸ்கந்த தலமும் அழைக்கப்படுகிறது.

இந்த திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது. இங்குள்ள மூன்று தெய்வங்களையும் வழிபட்டால் கைலாய மலையை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். இங்கு தட்சிணாமூர்த்திக்கு அருகில் சப்தரிஷிகள் என்னும் ஏழு முனிவர்கள் அமர்ந்து உபதேசம் செய்வதை சிலையாக வடித்துள்ளனர். இங்குள்ள சந்தான விநாயகருக்கு விளக்கேற்றி வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் தீரும். பெற்றோர்கள் நல்ல முன்னேற்றம் வாழ்வு அமையும் என்று நம்புகின்றனர்.சுவாமி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.
இங்கு ஓரு சித்தரின் ஜீவசமாதி உள்ளது. நோயால் அவதிப்படுபவர்கள், இவரது சன்னதியில் தரப்படும் விபூதியை பூசினால் தங்களது நோய் தீரும் என்றும் எதிரி தொல்லைகள் தீரும் என்றும் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமைகளில் வேல் பூஜை இங்கு நடைபெறுவது மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது.
முக்கிய விழாக்களாக வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆகியவை நடைபெறுகின்றன.
தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் பக்தர்களுடைய வரவுக்காக திறக்கப்பட்டு இருக்கின்றன. ஆண்டிபட்டி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆண்டிப்பட்டி தொலைபேசி எண் 927 648 943 541
முத்தி தருவது நீறு ;முனிவர் அணிவது நீறு ;
சத்திய மாவது நீறு;தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு ;பரவ இனியது நீறு ;
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே!!