செய்திகள்

2021 ஐபிஎல் போட்டியில் புதிதாக ஒரு அணி: ஜனவரி மாதம் வீரர்கள் ஏலம்

2021 ஐபிஎல் போட்டியில் புதிதாக ஒரு அணி:

ஜனவரி மாதம் வீரர்கள் ஏலம்

பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டம்

துபாய், நவ. 12–

2021ல் நடைபெறும் 14வது ஐ.பி.எல். போட்டிகளில் புதிதாக ஒரு அணியை இணைக்கவும், அதையொட்டி டிசம்பர் மாதத்தில் மீண்டும் வீரர் ஏலம் நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டமிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த 13வது ஐ.பி.எல் 2020 தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் 10–ந் தேதி முடிவடைந்தது. ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2020 எந்தவித பாதிப்புமின்றி வெற்றிகரமாக முடிந்துள்ளது. டெல்லி அணி உடனான இறுதிப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டிகள் நடத்தப்பட்டதால் பிசிசிஐ-க்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரிக்கட்ட அடுத்த ஐ.பி.எல் தொடரில் 9-வது அணியாக புதிய அணியை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகளில் சவுரவ் கங்குலி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (சர்தார் படேல் மைதானம்) கட்டப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஒரு ஐபிஎல் அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி 2021 ஐபிஎல் போட்டியில் குஜராத் சார்பாக ஓர் அணி புதிதாக உருவாக்கப்படவுள்ளது.

ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பொதுவாக டிசம்பர் மாதங்களில் நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனாவால் போட்டிகள் தள்ளிப்போனதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதியில் ஐ.பி.எல் ஏலம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஏலத்தில் புதிய அணியை களமிறக்கியும், போட்டிகளை அதிகப்படுத்தியும் வருவாய் இழப்பை சரிக்கட்ட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஐ.பி.எல் சீசனில் பல்வேறு மாற்றுத்திட்டங்களை கொண்டு வரவும் சவுரவ் கங்குலி திட்டமிட்டு வருவதாகவும், தற்போதுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *