செய்திகள்

சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டி: நாளை தொடக்கம்

சென்னை, மார்ச் 1–

சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடங்குகிறது.

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம், ஆச்சி குரூப் ஆப் கம்பெனிகள் ஆதரவுடன் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி நாளை முதல் 10-ந்தேதி வரை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இதில் நடப்பு சாம்பியன் ஐ.ஓ.பி, சுங்க இலாகா, இந்தியன் வங்கி, வருமானவரி, தமிழ்நாடு போலீஸ், ஐ.சி.எப், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி, செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி, சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு ‘பி’ டிவிசனில் வெற்றி பெற்ற சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப், 2-வது இடம் பிடித்த இந்தியன் வங்கி அணிகள் தரம் உயர்த்தப்பட்டு இந்த ஆண்டு ‘ஏ’ டிவிசனில் கால்பதிக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோத வேண்டும்.

லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி கோப்பையை வெல்லும். கடைசி 4 இடத்தை பிடிக்கும் அணிகள் தரம் இறக்கப்படும். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3½ லட்சம் ஆகும். போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், போட்டி இயக்குனர் ஏ. பழனியப்பன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சில ஆட்டங்களோடு கைவிடப்பட்ட இந்த போட்டி தற்போது மீண்டும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *