நாடும் நடப்பும்

சவால்களை சமாளிக்கும் சக்தி கொண்ட பட்ஜெட்

கடந்த ஆண்டின் பல்வேறு நிதி சிக்கல்களை சமாளித்தாக வேண்டிய கட்டாயத்துடன் நமது பொருளாதாரத்தையும் முன் அழைத்துச் செல்ல வேண்டிய காலகட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளார்.

இதில் நல்ல அம்சங்கள் இருக்கிறதா? வளர்ச்சிகளை உறுதிப்படுத்துமா? போன்ற கேள்விகளுக்கு விடையை பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கோணங்களில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள். எது எப்படியோ, குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் இந்த பட்ஜெட் ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள் நமக்கு புலப்படும்!

ஆனால் பட்ஜெட் அறிவிப்பை ‘காகிதமில்லா’ டிஜிட்டல் முறையில் சமர்ப்பித்தது, வருங்கால இந்தியா எப்படி இருக்கப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே இருக்கிறது.

இந்திய பட்ஜெட் சமர்ப்பிப்பு சுதந்திரம் பெறும் முன்பு ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பல்வேறு வழக்கங்கள், பிறகு சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கால நிதி அமைச்சர்களின் வழிமுறைகளை கொண்டு இன்றும் தொடர்கிறது. குறிப்பாக ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது திருக்குறளை சொல்லியே பட்ஜெட்டை சமர்ப்பித்தார், அதுபோன்றே தற்போது நிர்மலா சீதாராமனும் சமர்பித்திருப்பது பழமையை மறக்காமல் புதுமையை வரவேற்பது புரிகிறது!

இம்முறை பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கான உந்துதல் என்று பொருளாதார நிபுணர்கள் குர்விந்தர் கௌர் மற்றும் சுரபி ஜெயின் கூறுகிறார்கள்.

இந்தியாவின் இடைக்கால வளர்ச்சிப் பாதைக்கு அடித்தளம் இடுவதற்கு மத்திய பட்ஜெட் 2021–22 பெருமுயற்சிகளைக் கொண்டிருக்கிறது. பெருந்தொற்று பாதிப்பு மற்றும் அதன் பின் விளைவான சுகாதார பாதிப்புகள் என்ற இரட்டை அதிர்ச்சிகளில் இருந்து இந்திய பொருளாதாரம் சீராக மீட்சி கண்டு வருகிறது. நூறாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய ‘தாக்கத்தை ஏற்படுத்தும் சூழலை’ சமாளித்து மீள்வதற்கு இந்திய பொருளாதாரத்திற்கு மிகுந்த அவசியமானதாக உள்ள ‘விலகிச்செல்லும் திசைவேகம்’ அளிப்பதற்கான வழி முறைகளை இந்த பட்ஜெட் முன் வைத்துள்ளது.

அரசின் கடன் தேவைகளைக் குறிப்பிடும் நிதி பற்றாக்குறை இலக்கு, 2021 நிதியாண்டு தோராய மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.5 சதவீதம் என மாற்றப்பட்டுள்ளது. இது 2021 நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் ஜிடிபியில் 3.5 சதவீதமாக இருந்தது. வருவாய் வசூல் பற்றாக்குறை இதில் 30 சதவீத காரணமாக உள்ளது. மீதி 70 சதவீதம், இந்த ஆண்டின் கூடுதல் செலவினத்தால் ஏற்பட்டது. அதேபோல 2022 நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கு 6.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே விழிப்பு நிலையுடன் எதிர்மறை சுழற்சி நிதிக்கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. அதாவது பொருளாதார சரிவுகள் ஏற்படும் போது, வளர்ச்சி காணும் தத்துவத்தில் செயல்படுகிறது.

நாம் எதிர் கொண்டுள்ளதைப் போன்ற பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் தீவிர எதிர்மறை சுழற்சி நிதிக் கொள்கையை பின்பற்றுவதன் அறிவார்ந்த அணுகுமுறை குறித்து 2020–21 பொருளாதார ஆய்வறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது. பொருளாதார சரிவுகள் சூழலில் பாதிப்புக்களை தாங்கக் கூடிய நிதி விரிவாக்கத்துக்கு பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

பொருளாதார தேக்க நிலையில் அதிக நிதிப் பெருக வாய்ப்பு மூலம் தனியார் முதலீடு மற்றும் நுகர்வு நிலையை ஊக்குவித்தல்; ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயங்கும் தனியார் துறையினருக்கு ஆபத்து எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரிப்பு மூலம் இழப்பீடு அளித்து, உறுதியான முனைப்பை உருவாக்குதல் மற்றும் மத்திய அரசு மூலதன செலவாக ஒரு ரூபாய் செலவு செய்தால் தனியார் துறையின் மூலம் முதலீடு 3.25 ரூபாய் செலவிடப்படுகிறது. (ஆர்பிஐ அறிக்கை, ஏப்ரல், 2019) என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது என்று சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

மேலும் அவர்கள் கூறியிருப்பது, 2021 பொருளாதார ஆய்வறிக்கையை விரிவாக ஆய்வு செய்தால், கடந்த இரண்டரை தசாப்த காலத்தில் இந்தியாவில், ஜிடிபி வளர்ச்சியானது வட்டி விகிதத்தை விட அதிகமானதாக இருந்திருக்கிறது என்பதும் அதன் மூலம் எதிர்மறை வட்டி வகித வித்தியாசம் நிகழ்ந்திருக்கிறது என்பதும் அதனால் கடன் அளவுகள் குறைந்திருப்பதும் தெரிய வருகின்றன.

மேலும் 2021–22 மத்திய பட்ஜெட்டில் ஜிடிபியுடன் மத்திய அரசு கடன் விகிதம் 2021 நிதி ஆண்டில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடன் மற்றும் ஜிடிபி விகிதாச்சாரம் அதிகம் இருந்தாலும் மிக மோசமான சூழ்நிலையிலும் கடன் ஸ்திரத்தன்மை நிலை இந்தியாவுக்கு கவலை தரும் அளவுக்குப் போகாது என்ற ஆய்வறிக்கையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 நிதியாண்டில் இருந்து இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் 3.8 சதவீதம் இருக்கும் என்பதால் இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது.

நடப்புக்கள் நம் சக்தியைச் சோதிக்க அதை எதிர்த்து நிற்க முழு சக்தியுடன் சோர்வடைந்து விடாமல் செயல்பட்டாக வேண்டும்! அந்த சக்தியை தரும் வல்லமை கொண்ட பட்ஜெட்டை தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *