செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் 98% பேர் டிஸ்சார்ஜ்

சென்னை, பிப்.10–

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 302 ஆண்கள், 167 பெண்கள் என மொத்தம் 469 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 139 பேரும், கோவையில் 53 பேரும், செங்கல்பட்டில் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 299 ஆண்களும், 3 லட்சத்து 33 ஆயிரத்து 397 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 557 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 288 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் இருவரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா ஒருவரும் என 3 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரையில் தமிழகத்தில் 12,391 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 491 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேரும், கோவையில் 51 பேரும், செங்கல்பட்டில் 48 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 11 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். இது தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் ஆகும். தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 4 ஆயிரத்து 328 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 61 லட்சத்து 78 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்ற ஒரே நாளில் 51 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *