சென்னை, ஏப்.10-
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகியே இருந்தார். சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை வீதியில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்தநிலையில் ஆர்.எம்.வீரப்பன் சுவாசக்கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 98.
ஆர்.எம்.வீரப்பன் மரணம் அடைந்த தகவல் கிடைத்தவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வருகை தந்தார். அங்கு ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் ஆர்.எம்.வீரப்பனின் உடல் அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் ஆர்.எம்.வீரப்பனின் உடல், இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
மரணம் அடைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், தமிழழகன், செல்வம், தங்கராஜ் ஆகிய 3 மகன்களும், செந்தமிழ்ச்செல்வி, செந்தாமரை, தமிழரசி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவருடைய மூத்த மருமகன் டி.ஜி.தியாகராஜன் பிரபல பட அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரின் சினிமா நிறுவனத்தின் நிர்வாகியாக ஆர்.எம்.வீரப்பன் இருந்தார்.
பின்னர் எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க.வை தொடங்கியபோது, அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் அண்ணா தி.மு.க. பிளவுபட்டபோது, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக இருந்து கட்சியை வழிநடத்தினார். பின்னர் இரு அணிகளும் இணைந்த பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையின் கீழ் இணைந்து பணியாற்றினார். அவரது அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
1963-ம் ஆண்டு “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் சினிமா பட நிறுவனத்தை ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார். அரசியல் வாழ்க்கையிலும் கால் பதித்த அவர், 1977, 1986-ம் ஆண்டுகளில் மாநில சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். 1986 மற்றும் 1991ம் ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் முறையே திருநெல்வேலி, காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தகவல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், கல்வி மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் ஆகிய பதவிகளை அவர் வகித்தார்.
ஸ்டாலின் இரங்கல்
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அவரது 98-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ந் தேதி நேரில் அவரது இல்லத்திற்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன் நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற என்னை போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தம் அளிக்கிறது.
எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். பின்னாளில், எம்.ஜி.ஆர். கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், தி.மு.க.வுடனும், கருணாநிதியுடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.
அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மிகம் என்று அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாக திகழ்ந்தார். ஆர்.எம்.வீரப்பன் மறைவு, அரசியல் உலகிற்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலகம், இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பனின் புகழும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், சசிகலா, கவிஞர் வைரமுத்து, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், டெல்லி கம்பன் கழக நிறுவன தலைவர் கே.வி.கே.பெருமாள் உள்பட பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.