செய்திகள்

மேற்குவங்க தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 92 இடங்கள் ஒதுக்கீடு

கொல்கத்தா, மார்ச் 2–

மேற்குவங்க தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 92 சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 297 தொகுதிகளுக்கு மார்ச் 27ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 29ஆம் தேதி வரை 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கங்கணம் கட்டிவருகிறது.

இந்நிலையில், மம்தாவிடமிருந்து ஆட்சியைப் பிடுங்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. 8 கட்ட தேர்தல் கூட பாஜகவின் அரசியல் திருவிளையாடல்களில் ஒன்று என அரசியல் பார்வையாளர்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இரு கட்சிகளுமே மாபெரும் கூட்டணியை உருவாக்கி வைத்துள்ளன.

காங்கிரசுக்கு 92 இடம்

மேலும், இடதுசாரிகளும் காங்கிரஸும் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கின்றன. இச்சூழலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் காங்கிரஸுக்கு 92 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரு தினங்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 130 இடங்களை கேட்டிருந்த நிலையில், இன்னபிற கட்சிகளின் இணைவுகளைக் கருத்தில் கொண்டு, 92 இடங்களுக்குச் சம்மதித்ததாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதிர்ரஞ்சன் சௌத்ரி கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *