செய்திகள்

13 மாடி ரெயில்வே ஆபிசில் தீ: 4 தீ அணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உடல் கருகிச் சாவு

கொல்கத்தாவில் பயங்கரம்

13 மாடி ரெயில்வே ஆபிசில் தீ:

4 தீ அணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உடல் கருகிச் சாவு

இறந்தவர் குடும்பத்துக்கு தலாரூ.10 லட்சம் உதவி; அரசு வேலை: முதல்வர் மம்தா அறிவிப்பு

கொல்கத்தா, மார்ச் 9–

கொல்கத்தாவில் கிழக்கு ரெயில்வே மற்றும் தென்கிழக்கு ரெயில்வே அலுவலகங்கள் அமைந்துள்ள 13 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலியானார்கள்.

தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த விபத்து மேற்குவங்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள வடகிழக்கு ரெயில்வே மற்றும் தென்கிழக்கு ரெயில்வே அலுவலகங்கள் அமைந்துள்ள 13 மாடி கட்டிடம். இங்கு திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவலறிந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன. அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 4 தீயணைப்பு வீரர்களும், துணை காவல் ஆய்வாளர் ஒருவரும், ரெயில்வே ஊழியர்கள் இருவரும் அடங்குவர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட மேலும் சில வீரர்கள் காணாமல் போயிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது கட்டடத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டு, கட்டடம் முழுக்க குளிரூட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரெயில்வேக்கு சொந்தமான கட்டடம் என்றாலும், தீ விபத்து நடந்த போது மூத்த ரெயில்வே அதிகாரிகள் ஒருவர் கூட இங்கு வரவில்லை.

ரூ.10 லட்சம், அரசு வேலை: மம்தா அறிவிப்பு

முதல்வர் மம்தா இரவு 11 மணியளவில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

12–வது மாமடியின் லிப்ட்டில் 5 பேரின் சடலங்கள் கிடந்தன. மூச்சுத்திணறி உடல் கருகி இவர்கள் லிப்ட் உள்ளேயே இறந்து கிடந்தார்கள்.

25 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை முழுவதுமாக அணைத்தது.

விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக தீயணைப்புத்துறை அமைச்சர் சுஜித் போஸ் தெரிவித்தார்.

பலியானவர் குடும்பத்துக்கு மோடி தலா ரூ.2 லட்சம் நிதி

இந்நிலையில் கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும், விபத்தில் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *