செய்திகள்

9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9–ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்

* நாளை வேட்பு மனு தாக்கல்

* 12–ந்தேதி வாக்கு எண்ணிக்கை

சென்னை, செப்.14-

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9

மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தலை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் 2020-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி பதவி ஏற்றனர்.

தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் கடந்த ஜூன் 22-ந்தேதி பிறப்பித்த ஆணையில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல்களுக்கான அறிவிக்கைகளை வெளியிட்டு செப்டம்பர் 15-ந்தேதிக்குள் (நாளை) தேர்தல் முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்த மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட அறிவிக்கைகள் கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல்கள தயாரித்து கடந்த மாதம் 31-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது.

நாளை வேட்பு மனு தாக்கல்

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த வேண்டிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அடுத்த மாதம்(அக்டோபர்) 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் அறிவிக்கை மாநில தேர்தல் ஆணையத்தால் 15-ந்தேதி (நாளை) வெளியிடப்படும். அன்றைய தினமே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு பெறப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கைகளின்படி, வாக்குப்பதிவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த ஆணையம் முடிவெடுத்து உள்ளது. இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.

கொரோனா வழிகாட்டு

நெறிமுறைகளை பின்பற்றி…

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்து உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கண்டறிந்து அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வார்கள். வாக்குப்பதிவு வீடியோ எடுக்கப்படும், இணையதள கண்காணிப்பு போன்றவையும் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

27 ஆயிரம் பதவியிடங்கள்

9 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள். 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள். 2 ஆயிரத்து 901 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும், 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் ஆக மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

76½ லட்சம் வாக்காளர்கள்

9 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகளிலும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 6 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகளிலும் ஆக மொத்தம் 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

37 லட்சத்து 77 ஆயிரத்து 524 ஆண் வாக்காளர்களும், 38 லட்சத்து 81 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்களும், 835 திருநங்கைகள் உள்பட 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில் முதல்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்களும், 2-ம் கட்ட தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *