செய்திகள்

இன்று 88ம் ஆண்டு விமானப்படை தினம்: ரபேல் விமானம், ஹெலிகாப்டர்கள் நடுவானில் வீரதீர சாகசம்

இன்று 88ம் ஆண்டு விமானப்படை தினம்:

ரபேல் விமானம், ஹெலிகாப்டர்கள் நடுவானில் வீரதீர சாகசம்

தளபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ரசித்தனர்

காசியாபாத், அக்.8

‘‘இந்திய விமானப்படை, நமது நாட்டின் இறையாண்மையையும் நலன்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும்’’ என்று உறுதியளிப்பதாக விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்திய விமானப்படையில் உள்ள விமானங்கள் வான்வெளி சாகசங்களை நிகழ்த்தும். இன்று 88ம் ஆண்டு விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா பார்வையிட்டார். முதல் முறையாக அணிவகுப்பில் ரபேல் விமானம் பங்கேற்றது.

முதலில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பை விமானப்படை தளபதி பதூரியா பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக்கொண்டார். விமானப்படை தளபதி பதாரியா பேசுகையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால், இந்த காலப்பகுதியில் முழு அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறனை இந்திய விமானப்படை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எங்கள் விமானப்படை வீரர்களின் உறுதியும் தீர்மானமும் அதை உறுதிப்படுத்தியது என்றார்.

இந்திய விமானப்படை, நமது நாட்டின் இறையாண்மையையும் நலன்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன். வடக்கு எல்லைகளில் சமீபத்திய நிலைப்பாட்டில் விரைவான பதிலடி கொடுத்த அனைத்து விமான வீரர்களையும் நான் பாராட்டுகிறேன் என்றும் கூறினார்.

அதன்பின்னர் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. அதிக எடை உள்ள ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் முதலில் பறந்து சாசகம் செய்தது.

ரபேல் விமான சாகசம்

அதன்பின்னர் ரபேல் உள்ளிட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாக்கி ஸ்டேடியத்தின் அளவை விட குறைந்த பகுதியில் ரபேல் விமானம் லாவகமாக சுழன்று, 8 வடிவத்தை உருவாக்கி சாசகம் செய்தது. இது காண்போரை வியக்க வைத்தது. தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்றன.

விமானப்படை தினத்தையொட்டி ஹிண்டன் விமானப்படை தளம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி பதூரியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *