இடைவிடா உழைப்பு * தளர்ச்சியுறா தன்னம்பிக்கை * கடந்து வந்த பாதையில் உருக்குலையா ஒற்றுமை
இடைவிடா உழைப்பு, தளர்ச்சியுறா தன்னம்பிக்கை உருக்குலையா ஒற்றுமை! – மூன்றின் பிம்பமாய் கண்ணில் தெரிகிறார், விஜி சந்தோஷம்.
நெல்லை மாவட்டதிலுள்ள அழகப்பபுரம் என்னும் சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில், 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாளன்று, ஞானதிரவியம் -சந்தனம்மாள் என்ற உன்னத இணையருக்கு மகனாகப் பிறந்தவர்தாம் அவர்.
அவருடைய பெற்றோர் தத்தம் பெயருக்கேற்ப ஞானம், அன்பு, தியாகம் ஆகிய பண்பு நலன்களால், குடும்ப வாழ்க்கைதனை மணக்க வைத்து வந்து கொண்டு வந்தனர்.
வறுமை அவர்களது குடும்பத்தினையும் விட்டு வைக்கவில்லை! எனினும் தந்தையின் நம்பிக்கையும், தாயின் தியாகமும் உடன் பிறந்தோர்களாய் விளங்கிவந்தவர்களின் ஒற்றுமையும் வறுமையினை விரட்டிடும் வழிகாண அவர்களது நெஞ்சங்களில் ஓயாது ஒரு மந்திரத்தை ஒலிக்கச் செய்து கொண்டே இருந்தன! அதுதான், ‘சந்தோஷம். எப்போதுமே தம் தமையனார் பன்னீர்தாசின் மீது அளப்பரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவராவார்! அதேபோன்றே, தாய்மை உள்ளங்கொண்டு தம்மை ஊக்கப்படுத்திவந்த தம் அண்ணியார் பாரிஜாதத்தினையும் அன்னையென மதித்துப் போற்றிவந்தவர்!
இலக்குத் தெரியாது தவித்த அவர்களது குடும்பம் சென்னைக்குக் குடியேற, இவரது அருமைத் தமையனார் பன்னீா்தாஸ் இவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் தேநீா்க் கடையின் வளர்ச்சிக்குத் துணை நின்றனர். சைதாப்பேட்டைப் பகுதியில் ஒரு தேநீர்க் கடையினைத் தொடங்க, அதனையடுத்து, அவர்களது வளர்ச்சி படிப்படியாகத் தொடர்ந்தது! சீட்டுப் பிடிக்கும் தொழில், தவணை முறையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களையும் வானொலிப் பெட்டிகளை விற்றல் என்று விரிவடைந்து, வீட்டுமனைகள் விற்பனை, வீடுகள் கட்டிக் கொடுத்தல் என்று அவர்களது வளர்ச்சி அனைவரையும் ஈர்த்தது!
விஜிபி தங்கக் கடற்கரை
சென்னை அண்ணாசாலையில் உள்ள நுகர்பொருள் வணிகக்கடை அவர்களுக்குப் பெரியதொரு சிறப்பைத் தந்து வந்தது என்றால், கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னை வாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்கு இடமான விஜிபி தங்கக் கடற்கரை அவர்களது புகழினை இந்தியத் துணைக் கண்டம் முழுதும் பரவச் செய்தது.
சந்தோசம் அவர்கள் தமது தமையனாரின் மறைவுக்குப்பின், தாம் நிறுவிய விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக நூற்றுக்கணக்கான சான்றோர் பெருமக்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் விருதுகளும் பரிசுப் பொருள்களும் தகுதியுரைகளும், வழங்கி வருவதோடு, கவியரங்கங்கள், கருத்தரங்கள், பட்டிமன்றங்கள் வைத்துத் தமிழ் மொழிப் பற்றினை மக்களிடையே விதைத்தும் வந்துகொண்டிருக்கிறார். இத்தகைய நிகழ்ச்சிகளை, மிகவும் புதுமையாக, தொடர்வண்டியிலும், வானூர்தியிலுங்கூட நடத்திப் புகழ் பெற்றார்!
எல்லாவற்றிலும் மேலாக, உலகப் பொதுமறை தந்த உத்தமர் திருவள்ளுவரது திருவுருவச் சிலைகளினை இந்தியத் திருநாட்டிலும், கடல் கடந்த பல நாடுகளிலும் அவரது சொந்த நிதியிலிருந்து நிறுவி வந்து கொண்டிருக்கிறார்! இதுவரை 165 சிலைகளை வழங்கியுள்ளார்!
அவர், நாளை 15ந் தேதி விடுதலை நன்னாளில் அகவை 88ஐ தொடுகிறார். “வாழ்க, வாழ்க பல்லாண்டு, மேலும் தமிழ்த் தொண்டு செய்து கொண்டும், திருவள்ளுவர் திருவுருவச் சிலைகள் பல இன்னும் நிறுவி அவர் தம் தொண்டு சிறக்கட்டும்!