செய்திகள்

85 வது மாநாடு புதிய காங்கிரஸ் கட்சிக்கான தொடக்கம்: மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை

ராய்ப்பூர், பிப். 27–

புதிய காங்கிரஸுக்கான தொடக்கம் ஏற்பட்டுள்ளதாக 85 வது காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெருமிதத்துடன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் 85-ஆவது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே ஆற்றிய உரையில் கூறியதாவது:–

இன்றுடன் மாநாடு நிறைவடைகிறது. ஆனால், புதிய காங்கிரஸுக்கான தொடக்கம் ஏற்பட்டுள்ளதை அது குறிக்கிறது. பல்வேறு சவால்கள் இன்று நம்முன் உள்ளன.

ஆனால், அவற்றில் காங்கிரஸால் சமாளிக்க முடியாதது ஏதுமில்லை. ஒற்றுமை, ஒழுக்கம், உறுதி ஆகியவைதான் தேவைப்படுகின்றன. நமது பலம் என்பது கட்சியின் பலத்தில் உள்ளது.

தொடர்ந்து பயணிப்போம்

தேசிய அளவில் நமது செயல்பாடானது ஒவ்வொரு நிலையிலும் கட்சித் தொண்டர்கள் மீது தாக்கத்தைக் கொண்டிருக்கும். காலத்துக்கேற்ப பல்வேறு விஷயங்கள் மாறும். மக்களின் விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் மாறும். புதிய சவால்கள் உருவெடுக்கும். ஆனால் அவற்றுக்கு புதிய வழிகளும் கண்டறியப்படும்.

அதனால்தான் அரசியல் மற்றும் சமூக சேவைக்கான பாதை எப்போதும் முடிவதில்லை என்று கூறப்படுகிறது. நாம் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நமது தலைமுறையைச் சேர்ந்த பலரும் இந்தப் பாதையில் பயணிக்கின்றனர். அவர்கள் எதிர்காலத்திலும் இதைச் செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

காங்கிரசிடம் போராடும் துணிவு

மாநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி பேசியதாவது:–

மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு எதிர்க்கட்சியிடமும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதிகமான எதிர்பார்ப்பு காங்கிரஸிடமே உள்ளது. பாஜகவை எதிர்த்துப் போராடும் துணிச்சல் காங்கிரஸ் தொண்டர்களிடம் உள்ளது எங்களுக்குத் தெரியும். அந்த துணிச்சலை நாட்டுக்கு எடுத்துக்காட்டும் நேரம் வந்துள்ளது என்றார்.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்ற நிலையில், அருணாசல பிரதேசத்தின் பாசிகாட்டில் இருந்து குஜராத்தின் போர்பந்தருக்கு, கிழக்கு முதல் மேற்கு வரையிலான நடைப்பயணத்தை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனினும் அதன் வடிவம் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திலிருந்து சற்று மாறுபட்டிருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *