செய்திகள்

304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை துவக்கியது; 89% திட்டங்கள் அமுல்

இந்தியாவில் முன்னணி முதலீட்டு மாநிலம் தமிழகம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்

304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை துவக்கியது; 89% திட்டங்கள் அமுல்

சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் தகவல்

சென்னை, பிப்.23–

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலிருந்து கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை துவக்கியது; 89% திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:–

தொழில்துறை

2020–21ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள், இந்தியாவில் முன்னணி முதலீட்டு இலக்காக தமிழ்நாடு திகழ்வதை மீண்டும் உறுதி செய்துள்ளன. 2019ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலிருந்து இன்றைய நாள் வரையில், கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கி, 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக மொத்தம், 89 சதவீதத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை தொடர்ந்து, தமிழ்நாடு 1,08,913 கோடி ரூபாய் மொத்த முதலீட்டு மதிப்பில் 2,55,633 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 166 திட்டங்களை ஈர்த்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது, அனைத்திந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 1,69,496 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக, 88,727 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளுக்கான 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. முதலமைச்சரின் தலைமையின் கீழ் உயர்நிலைக் குழு, 71,766 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக, 39,941 கோடி ரூபாய் மதிப்பில் 62 முதலீட்டுத் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கியுள்ளது.

முதலமைச்சரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தொழில் கொள்கையால் தமிழ்நாட்டில் தொழில்மயமாக்கல் மேலும் முன்னேற்றம் அடையும். இக்கொள்கை, பல்வேறு தரப்பினரது கருத்துகளின் அடிப்படையிலும், டாக்டர் சி. ரங்கராஜன் குழுவின் சில பரிந்துரைகளின் அடிப்படையிலும் வகுக்கப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் உதவிகள் சார்ந்த விவரங்கள் இக்கொள்கையில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இக்கொள்கை, தென்மாவட்டங்களிலும், மாநிலத்தில் தொழிற்சாலைகள் குறைவாக உள்ள பகுதிகளிலும் தொழிற்சாலை அமைப்பதற்கு மேலும் ஊக்கத்தொகையினை அளிக்கிறது. வழிகாட்டி நிறுவனம் (GUIDANCE) பெருமளவில் வலுப்படுத்தப்பட்டு, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, கொரிய குடியரசு, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேசியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளுக்கான பிரத்தியேக அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம், 2,674 தொழில் நிறுவனங்களுக்கு 21,912 ஏக்கர் பரப்பளவு நிலத்தை இதுவரையில் ஒதுக்கீடு செய்துள்ளது. 3,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீட்டிற்காக தயார் நிலையில் உள்ளது. கூட்டு முயற்சியின் அடிப்படையில் புதிய தொழிற் பூங்காக்கள் அமைப்பதற்கு சிப்காட் ஊக்கம் அளிக்கின்றது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்துடன் உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு முகமை வாயிலாக வல்லம் வடகாலில் தொழிலக வீட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பாக்ஸ்கான் நிறுவனத்தின் பணியாளர்களுக்கான தங்குமிட வசதியும், 680 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். அதேபோல், கிருஷ்ணகிரி அருகிலுள்ள புதிய டாடா மின்னணுவியல் திட்டத்திற்காக வசதிகள் ஏற்படுத்தப்படும்.

காவனூரில் நிதி தொழில்நுட்ப நகரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு, சென்னை அருகிலுள்ள காவனூரில் நிதி தொழில்நுட்ப நகரத்தை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், தோராயமாக 260 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி வருகின்றது. புதிய நிதி தொழில்நுட்பக் கொள்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான உலக அளவில் ஒரு மையமாக சென்னை உருவாக வழி வகுக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக தொடர்ந்து விளங்குவதற்கு, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாளன்று, புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதலீட்டு வரம்புகள் கணிசமாக உயர்த்தப்பட்டதுடன், விற்பனை அளவு சார்ந்த வரன்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வரையறையை மத்திய அரசு மாற்றியது. இந்த மாற்றப்பட்ட வரையறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கும் வளர்ச்சியடைவதற்கும் உதவும்.

டாக்டர்.சி.ரங்கராஜன் குழு சிபாரிசு ஏற்பு

தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கோவிட்-19 பெருந்தொற்றினால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்கும், புத்துயிர் அளிப்பதற்கும் டாக்டர்.சி.ரங்கராஜன் குழு விரிவான பரிந்துரைகளை அளித்துள்ளது. இப்பரிந்துரைகளின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. டாக்டர் சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, கடன் வழங்கும் நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்துவதற்கும், அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும் கூடுதல் மூலதனமாக 1,000 கோடி ரூபாயை அரசு வழங்கும். இதற்காக, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2011–12 ஆம் ஆண்டு முதல் 2020–21 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், மொத்தம் 1,517.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட மானியங்களால் 43,041 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக மானியங்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டன. வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 210 கோடி ரூபாயில், இன்று வரையில் 191 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2011 ஆம் ஆண்டு முதல், 16,239 பயனாளிகளுக்கு 355.94 கோடி ரூபாய் விளிம்புத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2011-12 ஆம் ஆண்டு முதல், 42,238 பயனாளிகளுக்கு 230.78 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்கத்திலிருந்து, 4,178 பயனாளிகளுக்கு 407.96 கோடி ரூபாய் தனிநபர் அடிப்படையிலான மூலதன மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 37.05 கோடி ரூபாய் பின்முனை வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

தனியார் தொழிற்பேட்டை உருவாக்க சிறப்புத் திட்டம்

நடைமுறையில் உள்ள தொழிற்பேட்டைகளை உருவாக்கும் திட்டங்களுடன், தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு சிறப்புத் திட்டத்தை சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (SIDCO) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டம் மொப்பிரிபாளையத்திலுள்ள, கொடிசியா தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது, மற்றும் மதுரையிலுள்ள மதுரை பொறியியல் குழுமம் செயல்பாட்டில் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கள்ளபாளையத்தில் ஒரு புதிய தொழிற்பூங்காவை உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களை நகர்ப்புறங்களிலிருந்து மாற்றுவதற்கான சிறப்பு முயற்சித் திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையத்தில் ஒரு தேயிலை தொழிற் குழுமம் மற்றும் தென் மாவட்டங்களுக்கான ஒரு ஜவுளித் தொழில் குழுமம் ஒன்று விருதுநகரில் உருவாக்கிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *