செய்திகள்

800 கோடியை எட்டும் உலக மக்கள்தொகை

நியூயார்க், நவ.14–

நாளை (15–ந் தேதி) உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ளது.

பூமியின் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது. ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி ஆகப்போகும் தகவல், கடந்த ஜூலை 11–-ந் தேதி, ஐ.நா. வெளியிட்டது. உலக மக்கள்தொகை தினமான அன்றைய நாளில் வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘‘நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான நேரம் இது, பொதுமனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ்நாளை நீட்டித்து, மகப்பேறுகால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது’ என்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ்.

‘உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயமும் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது’ என்கிறார் அவர்.

மக்கள்தொகை, 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037–-ல் தான் அந்த ‘மைல்கல்’லை எட்டுவோம். ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

2050–-ம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *