செய்திகள்

80 வயதுக்கு மேற்பட்ட 4 முதியோருக்கு அப்போலோ மருத்துவமனையில் நவீன இருதய ஆபரேஷன்

சென்னை, பிப்.9-

சென்னை அப்போலோ மருத்துவமனையில், 80 வயதுக்கும் மேற்பட்ட அதிக அபாயக் கட்டத்தில் இருந்த 4 இருதய நோயாளிகளுக்கு மிக குறைவாக ஊடுருவும் மருத்துவ நடைமுறைகளை பயன்படுத்தி, இருதய நோய் நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் குழுவினர் வெற்றிகரமாக நவீன சிகிச்சை செய்து முடித்தார்.

இதுகுறித்து டாக்டர் சாய்சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இருதய வால்வு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இல்லாத 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு ‘குறைந்த அளவு ஊடுருவல்’ மருத்துவ சிகிச்சை. இது வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சை அல்ல. மிகவும் சிக்கலான இதய நோய்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கிறோம். இதனால் நோயாளிகளின் இருதயம் மீண்டும் வெகு சீக்கிரமே வழக்கம் போல் செயல்பட தொடங்கும்.

சமீபகாலமாக இந்த பிரச்சினைக்கு திறந்த இதய அறுவை சிகிச்சையே தீர்வாக இருந்தது. ஆனால் தற்போது நோயாளிகளின் உடலில் குறைந்த அளவு ஊடுருவும் மற்றும் பாதிப்புகள் அதிகமில்லாத மருத்துவ நடைமுறை ஒரு மிகப்பெரிய வரபிரசாதமாகும். இது அறுவை சிகிச்சைக்கு மிகச்சரியான மாற்றாக அமைந்துள்ளது.

‘மிட்ரகேப்’ என்பது மிக நவீன மற்றும் புதுமையான மருத்துவ சிகிச்சை. இருதயத்தில் பாதிப்பு அதிகம் ஏற்படும் போது உடலில் மிக குறைந்த அளவு ஊடுருவும் ‘மிட்ரகிளிப்’ நவீன சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும். இந்த முறையில் சிகிச்சை பெற்றவர்கள், விரைவாக குணமடைந்து வழக்கமான வாழ்க்கைக்கு விரைவில் திரும்பிவிட முடியும். ஒரு சில நோயாளிகள் 2 நாட்களிலேயே வழக்கமான வாழ்க்கையை தொடங்கி விடுகிறார்கள். அவர்களுடைய இருதயம் ஒரு ஆண்டில் மிகவும் வலுவாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

சாரதாம்பாள், ரங்கசாமி, பாபு பாய் சஜ்தேவ், கோபால்தாஸ்

சென்னையை சேர்ந்த சாரதாம்பாள் (வயது86), ரங்கசாமி (80), பாபு பாய் சஜ்தேவ் (89), கோபால் தாஸ் (83) ஆகியோருக்கு குறைந்த அளவு ஊடுருவும் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது ‘இருதய நோய்க்கு குறைந்த அளவு ஊடுருவும் நவீன சிகிச்சை பெற்று தற்போது ஆரோக்கியமாக இருக்கிறோம். எங்களுக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக உணர்கிறோம். நாங்கள் கண்டிப்பாக 100 வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ்வோம். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை எங்களுக்கு உருவாகியுள்ளது என்றனர். சாரதாம்பாள் கூறுகையில், ‘இருதய நோய் காரணமாக படுக்கையில் இருந்த எனக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் தற்போது பேட்மிண்டன் விளையாடும் அளவுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *