செய்திகள்

8 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவம் பாதுகாப்பு

ஓட்டுக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை பாயும்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஏப்.5-

ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தென்சென்னை, மதுரை தொகுதிகள் உள்பட தமிழ்நாட்டில் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் அவர் கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், உள்துறைச் செயலாளர்கள் மற்றும் முக்கிய அலுவலர்களுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பக்கத்து மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை செய்வது பற்றியும், தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றியும் ஆலோசனை வழங்கினார்.

வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு அனுமதிகளை ‘சுவிதா செயலி’ மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெற வேண்டும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமருக்கு மட்டும் சில விதிவிலக்கு உள்ளது. அது தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்படுகிறது. ரோடு ஷோவுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பயன்படுத்தும் வீடியோ வகை வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் கமிஷன் வழங்கும். மற்ற வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம்தான் பெறவேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படுகிறது. இதுவரை 13.08 லட்சம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். இதில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதில் அதிகபட்சம் 50 ஓட்டுக்களை பதிவு செய்யலாம்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு பாடல் அடங்கிய ஆடியோ கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டப்பட்டது. தற்போது அதே பாடல், வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் குற்றம், அதை வாங்குவதும் குற்றம். ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம், இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்தல் போன்றவை குறித்து, பொதுமக்கள், ‘சி விஜில்’ மொபைல் ஆப்ஸ் வழியாக புகார் அளிக்கலாம். தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க, பொதுமக்கள் முன் வர வேண்டும்.

கோவை பா.ஜனதா வேட்பாளர் அண்ணாமலை, ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக வந்த வீடியோ, கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த பழைய சம்பவம் என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து வந்த புகார் மீது விசாரணை நடைபெறுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக இதுவரை வேறு புகார்கள் இல்லை.

பதற்றமான வாக்குச்சாவடிகளில்

துணை ராணுவம்

தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டுள்ளது.

அதிகபட்சமாக மதுரை தொகுதியில் 511 வாக்குச்சாவடிகளும், தென் சென்னையில் 456 வாக்குச்சாவடிகளும், தேனியில் 381 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. திருவள்ளூர் தொகுதியில் 170, வடசென்னையில் 254, மத்திய சென்னையில் 192, ஸ்ரீபெரும்புதூரில் 337, காஞ்சீபுரத்தில் 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளன.

பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாகேவே துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படும். மேலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

பதற்றம் குறைந்த ஓட்டு சாவடிகள் உள்ள தொகுதிகளாக பெரம்பலுார் (55 ஓட்டு சாவடிகள்), விழுப்புரம் (76 ஓட்டு சாவடிகள்), திருச்சி (84 ஓட்டு சாவடிகள்) அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலில் 90 சதவீதத்துக்கு மேல் ஓட்டுப் பதிவாகி, அதில் 75 சதவீத ஓட்டுகள் ஒரு வாக்காளருக்கு சென்றிருந்தால், அதுபோன்ற வாக்குச்சாவடிகள் மிகப்பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

அதில் அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 39 வாக்குச்சாவடிகளும், வடசென்னையில் 18 வாக்குச்சாவடிகளும், அரக்கோணம் தொகுதியில் 15 வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

திருவள்ளூர் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் உள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 4 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேர் உள்ளனனர். அவர்கள் 12-டி படிவத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்திருந்தது.

அதற்கு விருப்பம் தெரிவித்து 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 4.30 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகள் 3.66 லட்சம் பேரும் விண்ணப்பம் பெற்றனர். பூர்த்தி செய்த படிவங்களை 85 வயதுக்கு மேற்பட்ட 77 ஆயிரத்து 455 பேரும், மாற்றுத் திறனாளிகள் 50 ஆயிரத்து 676 பேரும் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்தே வாக்குப்பதிவு செய்யலாம்.

அந்த வகையில் முதியவர்களிடம் வீடுகளுக்கு சென்று ஓட்டுகளை பெறும் நடவடிக்கை, திருச்சி, ஈரோடு, கோவை தொகுதிகளில் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *