செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன் 29 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி, ஜன.13-

சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்றபோது மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் 6 விமான ஊழியர்கள் மற்றும் விமானப்படை, கடற்படை, ராணுவம் மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த வீரர்கள் 15 பேர் இருந்தனர். மேலும் கடற்படை ஆயுதக்கிடங்கில் பணிபுரியும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 8 பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர்.

29 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் அடுத்த 16 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அத்துடன் விமானப்படை தளத்தின் ரேடாரில் இருந்து மறைந்தது. சென்னைக்கு அருகே 370 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே 25 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனது. விமானம் மாயமான தகவல் முப்படை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை கிளப்பியது.

இந்த விமானத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கடலோர காவல் படை வீரர் முத்துகிருஷ்ணனும் இருந்தார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாயமான விமானம் வங்காள விரிகுடாவில் விழுந்திருக்கலாம் என கருதி கடலில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடற்படை நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள், வணிகக்கப்பல்கள் என சுமார் 20 கப்பல்கள் தேடும் பணியில் களமிறங்கின.

தேடும் பணி

கைவிடப்பட்டது

இதைத்தவிர விமானப்படை மற்றும் கடற்படையை சேர்ந்த ரோந்து விமானங்களும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. விமானம் செல்லும் பாதையில் இந்த தேடும் பணிகள் நடந்தன. ரேடாருடன் கூடிய செயற்கைக்கோள் உதவியுடனும் தேடப்பட்டது. ஆனால் விமானத்தின் சிதைவுகளோ, பயணிகளின் உடல்களோ, உடைமைகளோ எதுவும் கடலில் கிடைக்கவில்லை. இதைப்போல விமானம் விழுந்தால் ஏற்படும் எண்ணெய் படலமும் கடலில் தென்படவில்லை. மாதக்கணக்கில் நடந்த இந்த தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே இந்த தேடுதல் பணிகள் அனைத்தும் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி கைவிடப்பட்டது. விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடைக்காதது முப்படையினருக்கு பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் உடைந்த பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து 140 நாட்டிக்கல் மைல் (சுமார் 310 கி.மீ.) தொலைவில் ஆழ்கடல் பகுதியில் இந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதாவது தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் தனது தானியங்கி நீர்மூழ்கி வாகனத்தை சமீபத்தில் அந்த பகுதியில் செலுத்தி சோதனை நடத்தி இருக்கிறது. அப்போது விமானத்தின் உடைந்த பாகங்கள் சிலவற்றை இந்த வாகனம் படம்பிடித்து உள்ளது. அந்த படங்களை ஆய்வு செய்ததில் அது மாயமான விமானப்படை விமானம் ஏ.என்.32 (கே.2743)-க்கு உரியதுதான் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த பாகங்கள் காணப்பட்ட இடத்தில் வேறு எந்த விமானமும் மாயமானதாக தகவல் இல்லை. எனவே தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அந்த பாகங்கள் மாயமான ஏ.என்.32 (கே.2743) விமானத்துக்குரியதாக இருக்கலாம் என ராணுவ அமைச்சகம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *