செய்திகள்

தமிழகத்தில் 790 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, ஜன.9-

தமிழகத்தில் 790 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 479 ஆண்கள், 311 பெண்கள் என மொத்தம் 790 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 208 பேரும், கோவையில் 79 பேரும், செங்கல்பட்டில் 58 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தேனியில் தலா 5 பேரும், அரியலூர், ராமநாதபுரத்தில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் புதிய பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 24 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 518 ஆண்களும், 3 லட்சத்து 26 ஆயிரத்து 224 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 ஆயிரத்து 520 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 347 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் என 8 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் தமிழகத்தில் 12,208 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 897 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 89 ஆயிரத்து 165 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 932 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த மாதம் டிசம்பர் 23-ந்தேதி வரை தமிழகம் வந்த 2 ஆயிரத்து 300 பேரில், 2,146 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 2,122 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 253 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

சென்னையில் அண்ணா தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சேலம் மாவட்டம் கெங்கவல்லி மருதமுத்து எம்.எல்.ஏ. மற்றும் தலைவாசல் அண்ணா தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும், தலைவாசல் ஒன்றிய குழு தலைவருமான ராமசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக கொரோனா பரிசோதனை கட்டாயமாக செய்ய வேண்டும் என்றும், அதில் தொற்று இல்லை என்றால் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தனர். இதற்காக தலைவாசல் அரசு மருத்துவமனையில் 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரும் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உள்நாட்டு விமானத்தில் சென்னை வந்த இங்கிலாந்து பயணிகள் 4 பேரை கொரோனா பரிசோதனைக்கு பிறகு தனியார் ஓட்டலில் சுகாதார துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *