புதுடெல்லி, ஆக.15–
இன்று இந்தியாவின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வழக்கமான எழுச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டது.
டெல்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி தேசியக் கொடியை இன்று காலை 7.30 மணிக்கு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
‘வரும் 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்,” என தன் உரையில் அவர் குறிப்பிட்டார்.
செங்கோட்டையில் இன்று (15–ந் தேதி) பிரதமர் மோடி தொடர்ந்து 11ம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.
முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, அவர் ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தேசிய கொடியை ஏற்றி வைத்து, ‘பாரத் மாதா கி ஜே’ என்று மோடி உரையை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். அவர்கள் தான் நமக்கு சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தனர். தியாகம் செய்தவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இயற்கை பேரிடர்களால் துன்பத்திற்கு ஆளாகியுள்ளோம். பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் நாடு துணை நிற்கும். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம். 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
காலனி ஆதிக்கத்தின் கீழ்
இந்தியா சிக்கித் தவிப்பு
காலனி ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகள் இந்தியா சிக்கித் தவித்தது. அடிமைத்தன மன நிலையை கைவிட வேண்டிய தருணம் இது. 40 கோடி இந்தியர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடினர். அவர்கள் சுதந்திரத்தை நனவாக்கினர்.
140 கோடி பேரும் இணைந்து வளர்ந்த இந்தியாவை சாத்தியமாக்குவோம். ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பலன் பெறுகின்றன. சுவாச் திட்டம் மூலமாக இரண்டரை கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து வரும் பரிந்துரைகளும் கருத்துகளும் எனக்கு உத்வேகம் அளிக்கின்றன.
நமது நீதித்துறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். 2047ல் வளர்ந்த பாரதம் என்பது வார்த்தைகள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் உறுதி மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பு. பருவநிலை மாற்றத்திற்கான தீர்வுக்காக உலக நாடுகளே நம்மை எதிர்நோக்கி காத்துள்ளன. நிர்வாக சீர்திருத்தங்கள், விரைவான நீதி, பாரம்பரிய மருத்துவ மேம்பாடு அவசியம்.
பயங்கரவாதிகளுக்கு
எதிராக தாக்குதல்
பயங்கரவாதிகளுக்கு எதிராக துல்லியத் தாக்குதலை நடத்தினோம். நாட்டிற்கு வலிமை சேர்க்கவே பல்வேறு துறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறோம். உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
நமது வலிமையான வங்கித்துறை மாற்றங்களை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. சீர்த்திருத்தங்கள் நாட்டை வலுமைப்படுத்தத்தானே தவிர, பப்ளிசிட்டிக்காக அல்ல. இன்றைய இளைஞர்கள் மெதுவான வளர்ச்சியை விரும்பாமல், அசுர வளர்ச்சியையே விரும்புகிறார்கள். கடந்த கால கலாசாரத்தில் இருந்து ஆட்சியை மாற்றியுள்ளோம். அரசை மக்கள் நாடும் நிலை மாறி, மக்களை அரசே நாடி நலத்திட்டங்களை வழங்குகிறது.
அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்தும் தகர்த்து எறியப்படும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைய நீதியும், நேர்மையும் சாவி. சாலைகள், ரயில்கள் மற்றும் விமான சேவைகள் முன்னேற்றம் கண்டுள்ளன.புதிய குற்றவியல் சட்டங்கள் நீதித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. விரைவான நீதியை வழங்குவதை புதிய குற்றவியல் சட்டங்கள் உறுதி செய்யும். ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்ய உறுதி பூண்டுள்ளோம்.
வாழ்வை எளிமையாக்க சீர்திருத்தம்
மக்களின் வாழ்வை எளிமையாக்க சீர்திருத்தம் என்ற பாதையை தேர்வு செய்துள்ளோம். ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியும். குடிமக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை தரப்படும். மக்களுக்கு சேவையாற்றுவதே எனது குறிக்கோள். சர்வதேச சந்தையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. 3வது முறையாக மக்கள் எங்களை தேர்வு செய்து உள்ளனர். அவர்களுக்கு தலை வணங்குகிறேன். கொரோனா கால பாதிப்புக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திய நாடு இந்தியா.
75 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் கொண்டு வரப்படும். கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறோம். வேளாண் சீர்திருத்தங்களே தற்போதைய தேவை. வரும் நாட்களில் நாட்டை இயற்கை உணவு மையமாக மாற்ற முயற்சி செய்கிறோம். உலகத்தரமான செல்போன்கள் இறக்குமதி என்ற நிலை மாறி, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில், குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்.
ஊழல்வாதிகளுக்கு
எதிரான நடவடிக்கை
மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை இந்தியா ஊக்குவிக்கிறது. 2040க்குள் எரிசக்தி உற்பத்தி திறனை உயர்த்த வேண்டும். ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு 140 கோடி மக்கள் சார்பில் வாழ்த்துக்கள். 2036ல் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த தயாராகி வருகிறோம். ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். ஊழல்கள் மூலம் சாமானிய மக்களை கொள்ளையடிக்கும் பாரம்பரியம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தியா புத்தரின் பக்கம் இருக்கிறது. யுத்தத்தின் பக்கம் அல்ல. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர், ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்! என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பாதுகாப்பு
சுதந்திர தினம் முன்னிட்டு தேசிய தலைநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் , 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தின கொடியேற்று விழா உற்சாகமாக நடந்தது. அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றி வைத்து கொண்டாடினர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பல அரசு அலுவலக கட்டடங்கள் இந்திய தேசிய கொடியின் மூன்று வண்ணங்களால் ஒளிரச் செய்யப்பட்டன.
அமெரிக்கா வாழ்த்து
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ‘சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கும், உலகில் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் அமெரிக்கா சார்பில், சுதந்திர தின வாழ்த்துக்கள். அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவு வலுவானது. காலநிலை முதல் விண்வெளி தொழில்நுட்பம் வரை இருதரப்பு உறவு முன்பை விட மிகவும் வலுவானது’ என்று கூறியுள்ளார்.