செய்திகள்

75 வாரங்களுக்கான சுதந்திர தின கொண்டாட்டம்

சேலம், மார்ச் 13–

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், 75 வாரங்களுக்கான கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் 75 வாரத்திற்குத் தொடர் நிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் உயர்கல்வித்துறையின் உத்தரவின் பேரில், மகாத்மா காந்தியடிகள் தண்டி யாத்திரை தொடங்கிய நாளான மார்ச் 12 ஆம் தேதி 75 வார சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

இதனையொட்டி, ‘விடுதலை வேள்வியில் தமிழகத்தின் பங்கு’ என்ற பொருண்மையில் சிறப்பு உரையரங்கம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் (பொ) மோ.தமிழ்மாறன் வரவேற்று பேசினார். இக்கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேல் உரையாற்றினார்.

அவர் உரையின் ஒரு பகுதி வருமாறு;“அகிம்சை என்ற கருத்தாக்கத்தை மையப்படுத்தி போராடிய மகாத்மா காந்தி போன்ற தன்னலமற்ற தலைவர்களின் முயற்சியால்தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது.

தன்னலமற்ற தலைவர்கள்

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பின் காரணமாக உலக அரங்கில் இந்தியா தனித்தன்மையுடன் திகழ்கிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகமே புதிய சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயங்கிய நிலையில் கூட இந்தியா அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தடுப்பூசி தயாரித்து உலகத்திற்குத் தனது ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை அளித்து வருகிறது.

தன்னலமற்ற தேசத்தலைவர்களின் உயரிய பங்களிப்பின் காரணமாகவே சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதை இளைஞர்கள் நன்கு உணர்ந்து கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக தங்களின் பணிகளை வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.” என்றார்.

உலக அரங்கில் இந்திய அறிவு

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் டிரினிடி கல்லூரி இயக்குநர் கலைமாமாணி அரசு பரமேஸ்வரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “நாம் ஒருகாலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களின் ஆளுகையின் கீழ் அடிமை நாடாக இருந்தாலும், எந்த நாட்டையும் அடிமைக்கொள்ளக் கூடாது என்பதில் இன்றுவரை நாம் உறுதியாக இருக்கிறோம். இந்திய அறிவு தான் உலகை ஆட்சி செய்கிறது. இந்திய நாட்டு இளைஞர்களின் அறிவும், உழைப்பும் தான் பல நாடுகளின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வருகிறது என்பதனை அனைவரும் அறிவர்” எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனவைருக்கும் உதவிப்பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *