சென்னை, டிச. 12–
75வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி, கமல், விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 75 பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர், திரையுலகத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் ரஜினிக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன என்றார்.
கமல்ஹாசன்
‘அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க’
அன்புமணி ராமதாஸ்
“நடிகர் நண்பர் ரஜினிகாந்த் இன்று 75-ம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”என கூறியுள்ளார்.