செய்திகள்

75வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மனைவியுடன் பங்கேற்பு

போர் நினைவு சின்னத்தில் மோடி மலர்வளையம்

புதுடெல்லி, ஜன. 26–

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்.

இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லி கடமைப் பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

21 குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்றார். குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து வரப்பட்டார். அவரது வாகனத்துக்கு முன்பும், பின்பும் குதிரையில் வீரர்கள் அமர்ந்து அவரை அழைத்து வந்தனர்.

பிரான்ஸ் அதிபர்

அவருடன் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவியும் சாரட் வண்டியில் வந்தனர்.

விழாவில் பங்கேற்க வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி வரவேற்றார். பிறகு, ராணுவ தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை தொடங்கி வைத்த ஜனாதிபதி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளின் ஊர்வலத்தை அவர் கண்டு ரசித்தார்.

இதனைத் தொடர்ந்து பெண்கள் சக்தியை பறைசாற்றும்படி 112 பெண்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் நாதஸ்வரம், செண்டை மேளம் உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி வந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பும் நடந்தது.

70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. டெல்லி 28 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். டெல்லி முழுவதும் 70 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முன்னெச்சரிக்கையாக டெல்லி வான் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில் இருஅடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது

முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ராணுவ வீரர்களுக்கு

அஞ்சலி

பின்னர் சில நிமிடங்கள் அமைதியாக நின்று நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினர்.

ஆண்டுதோறும் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியின் உடைகள் மற்றும் அவர் அணிந்துவரும் தலைப்பாகை கவனம் பெறும். கடந்த 9 ஆண்டுகளாக தனித்துவமான தலைப்பாகையை அணிந்து வருவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார் அவர். கடந்த ஆண்டு, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரின் வரலாறுகளை குறிக்கும் வகையிலான தலைப்பாகையை அணிந்திருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டு அவர் அணிந்திருந்த தலைப்பாகை ராஜஸ்தானி பாந்தனி வகை தலைப்பாகை எனக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *