ஆர் முத்துக்குமார்
நமது சுதந்திர இந்தியாவின் 74–வது குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26) நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
மக்களால் மக்களுக்காக என்பதே நமது இந்தியக் குடியரசின் கோட்பாடு.
தாய்த்திரு நாட்டிற்காக தம்மையே அர்ப்பணித்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்பு அதிகார ஆட்சியை முறியடித்து பாரத மக்கள் எல்லோரும் ஆனந்தமாக , சுதந்திரக் காற்றை சுவாசிக்க தேசத் தலைவர்கள் , புரட்சியாளர்கள் என்று பலரும் பாடுபட்டனர்.
நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம் போன்ற பற்பல போராட்டங்களை நிகழ்த்தி தமது குருதி சிந்தி, தமது உடல் பொருள் உயிரையே அர்ப்பணித்து போராடி விடுதலை பெற்றுத் தந்துள்ளனர் .
அவர்களது தியாகங்களால் 1947, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றோம். ஜனவரி 26 ஆம் தேதி ஏன் இந்தியக் குடியரசு நாளாகத்தேர்வு செய்யப்பட்டது ?
இந்தியக் குடியரசு நாள் கொண்டாட்டங்களின் பின்னணியிலுள்ள பல சுவாரஸ்யமான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்:
முதலில் குடியரசு என்றால் என்ன?
நாட்டு மக்கள் தங்கள் நலன் காக்க தங்களில் ஒருவரை தங்கள் சார்பில் ஆள்பவராகத் தேர்வு செய்து அனுப்பும் உரிமையைக் கொடுக்கும் மக்களாட்சி அமைப்பு ‘ஜனநாயகம்’ (Democracy) என்று பரவலாக அழைக்கப்படுகிறது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் அமைப்பு ‘குடியரசு’ (Republic) எனப்படுகிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு நாள். இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்திற்கான விதிகளைக் கொண்டுள்ள ஆவணம் ஆகும்.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு நமது மக்களுக்கு என தனிப்பட்ட சட்ட திட்டங்கள், அரசியல் அமைப்பு போன்றவை இல்லாமல் இருந்தது. அந்த காலகட்டத்தில் எதேச்சாதிகார ஆங்கில அரசாங்கம் என்ன சட்டம் இயற்றியதோ அதன் வழியேதான் தற்காலிகமாக நாம் சென்றோம். அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசுச் சட்டம், 1935 (Government of India Act , 1935) இந்த தகுதியைப் பெற்றிருந்தது.
இந்தியா விடுதலை பெற்றிருந்த பின்னரும் மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்டன.
அரசாங்க மேலாண்மைக்கும் இதர நிர்வாகச் செயல்பாடுகளுக்கும் இச்சட்டம் ஆதாரமாக அடிப்படையாக அமைந்திருந்தது.
இக்கவலையைத் தீர்க்கும் பொருட்டு நேரு, வல்லபாய் பட்டேல், ராஜாஜி மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட உறுப்பினர்களைக்கொண்ட குழு ஒன்று அரசியல் நிர்ணய சபை உருவாக்கியது.
அந்த அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்குழுவின் யோசனையின் பேரில் நமக்கென ஒரு அரசியல் சாசனம் உருவாக்கும் பணியை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு 1947 ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று தொடங்கியது. 2 வருடம் 11 மாதம் 18 நாளில் எடுத்துக் கொண்ட அப்பணிகளை முடித்து, 1950 ஜனவரி 24 அன்று அந்த அரசியல் சாசனத்தை பாராளுமன்றத்தில் ஒப்படைத்தது.
அன்றுதான் அரசியல் நிர்ணய சபையின் தலைமையில் குடியரசுத் தலைவருக்கான போட்டியும் நடந்தது. அதிலும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தே முதல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றார்.
அவரின் ஒப்புதலுக்கு இணங்க ஜனவரி 26 ஆம் நாள் அன்று நம் இந்தியர்களுக்கென , இந்தியர்களால் அரசியல் சாசனம் உருவானது.
அன்றைய தினமே நம் நாட்டின் குடியரசு தினம் என்று அனைவராலும் ஏற்கப்பட்டுப் போற்றப்பட்டது.
இச்சட்டம்முழுமையாக 1950, ஜனவரி 26 அன்றுதான்அமலுக்குவந்ததுஎன்றாலும் குடியுரிமை, தேர்தல், இடைக்காலஅரசு, இடைக்காலநாடாளுமன்றம்உள்ளிட்டவை குறித்த சரத்துக்கள் உடனடியாக அமலுக்கு வந்தன.
பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் நகரில் 1929 டிசம்பரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திர (முழு விடுதலை) தீர்மானம் நிறைவேறியது. 1930 ஜனவரி 26 அன்று, ஆண்டு தோறும் அந்தத்தேதியை விடுதலை நாளாக அனுசரிக்க நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்புவிடுத்தது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர்ஜனவரி 26–ம் தேதி அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் நாளை குடியரசு நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆண்டு தோறும் குடியரசு நாள் அணி வகுப்பு டெல்லி ராஜபாதையில் நிகழும். குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி இந்தியா கேட் வரை நடக்கும்
குடியரசு நாள்அணி வகுப்பின் மரியாதையை யார் ஏற்றுக்கொள்வார்?
இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியான (Commander-in-Chief ) இந்தியக் குடியரசுத் தலைவர் குடியரசு நாள் அணி வகுப்பில் அளிக்கப்படும் மரியாதையை ஏற்றுக் கொள்வார்.
இந்நிகழ்வில் பிற ராஜ்ஜிய அரசின் தலைவர் (பிரதமர் அல்லது அதிபர்) தலைமை விருந்தினராகப் பங்கேற்பார்.
குடியரசு தின கொண்டாட்டங்களின் போது மாநில தலைநகரங்களில் யார் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார்கள்?
1973 வரை மாநில தலை நகரங்களில்அந்தந்த மாநிலஆளுநர் தான் குடியரசுநாள், விடுதலை நாள் ஆகிய இரு கொண்டாட்டங்களின் போதும் தேசியக் கோடியை ஏற்றினார்கள்.
அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவதைப் போல மாநில முதல்வர்களும் விடுதலை நாள் கொண்டாடத்தின் போது கொடியேற்ற வேண்டும் என்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் வலியுறுத்தினார்.
அது ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்திய மாநிலத் தலைநகரங்களில் மாநில அரசு சார்பாக நடக்கும் குடியரசுநாள் கொண்டாட்டங்களில் 1974 முதல் ஆளுநர்களும் விடுதலை நாள் கொண்டாட்டங்களில் மாநில முதல்வர்களும் கொடிஏற்றுகின்றனர்.
சும்மாவா வந்தது நமது பாரதத்துக்கு சுதந்திரமும் அதனைத் தொடர்ந்த குடியரசு அமைப்பும்.
ஒன்றுபட்டிருக்கும் அகண்ட பாரதத்தின் முன்னேற்றத்தில் அக்கறைகொண்டு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்கள் அனைவரையும் இந்நன்னாளில் நினைவுகூர்வோம்.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கவும், பொருளாதார சுதந்திரத்தை வென்றெடுத்து, பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் மேலும் உருவாக்கவும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வளமான பாரதத்தை உருவாக்க சூளுரை மேற்கொள்வோம்.