செய்திகள்

72 வயது முதியவருக்கு வெவ்வேறு தடுப்பூசி டோஸ் போட்ட அலுவலர்கள்

மும்பை, மே 14–

மகாராஷ்டிராவில், 72 வயது முதியவருக்கு முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில், ஜல்னா மாவட்டத்தின் பார்த்தூர் தாலுகாவில் உள்ள காந்த்வி கிராமத்தில் வசிக்கும் தத்தாத்ரயா வாக்மரே (வயது 72) என்ற முதியவருக்கு, மார்ச் 22ஆம் தேதி கிராமப்புற மருத்துவமனையில் கோவாக்சின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். இதனையடுத்து, ஏப்ரல் 30-ஆம் தேதி ஷிருஷ்டி கிராமத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்தில் அவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது. அப்போது அவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாற்றி போட்ட அலுவலர்கள்

இதுகுறித்து அந்த முதியவரின் மகன் திகம்பர் கூறுகையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு பின் எனது தந்தைக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடலில் தடிப்புகள் ஏற்பட்டது. நாங்கள் அவரை பார்த்தூரில் உள்ள மாநில சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றோம். அங்கு அவருக்கு சில மருந்துகள் வழங்கப்பட்டன.

சில நாட்களுக்கு பின், அவரது இரண்டு தடுப்பூசி சான்றிதழ்களை பார்த்த போது தான், அவருக்கு தடுப்பூசி மாற்றி போடப்பட்டது தெரியவந்தது. என் தந்தை கல்வியறிவற்றவர். நானும் அதிகம் படிக்கவில்லை. சரியான முறையில் தடுப்பூசி கிடைப்பது, தடுப்பூசி மையத்தில் இருக்கும் சுகாதார அதிகாரிகளின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த முதியவர் ஒரு இதய நோயாளி என்றும், அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினை குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவுரங்காபாத் பிரிவு சுகாதார துணை இயக்குனர் சுவப்னில் லாலே விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *