செய்திகள்

72 தொகுதிகளுக்கான பாரதீய ஜனதா கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி, மார்ச்.14-

72 தொகுதிகளுக்கான பாரதீய ஜனதா கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மைசூரு தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் மைசூரு மன்னர் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை அறிவிக்க தொடங்கி விட்டன.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி முதல் கட்டமாக 195 தொகுதி களுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி (வாரணாசி), மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (காந்திநகர்) ஆகியோரது பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

இந்த நிலையில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான பாரதீய ஜனதா மத்தியக்குழு கூட்டம் கூடியது. அதில் பட்டியல் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாலை 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

கர்நாடகம், மத்தியபிரதேசம், குஜராத், பீகார், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் தற்போதைய மத்திய அமைச்சர்கள் சிலருக்கும், அரியானா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய மனோகர் லால் கட்டார், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி – – நாக்பூர். (மராட்டியம்), அனுராக் சிங் தாக்குர் – – ஹமீம்பூர் (இமாச்சல்), பியூஸ்கோயல் -– மும்பை வடக்கு (மராட்டியம்), பிரகலாத் ஜோஷி–தார்வாட் (கர்நாடகம்) மற்றும் மனோகர் லால் கட்டார் – – கர்ணல் (அரியானா), பசவராஜ் பொம்மை – – ஹவேரி (கர்நாடகம்), கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா–சிவமொக்கா, மைசூரு மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் -– மைசூரு.

பாரதீய ஜனதா சார்பில் இதுவரை 267 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முறையும் இந்த பட்டியலில் தமிழக வேட்பாளர்கள் குறித்த தகவல் இடம் பெறவில்லை.

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நிறை வடைந்ததும், அடுத்தக்கட்ட பட்டியலில் அனேகமாக தமிழக வேட்பாளர்கள் பெயரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *