சென்னை, மார்ச் 13–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72–வது பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க சென்னை கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ”மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவில்” துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 72 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்களுக்கு பிரிட்ஜ், வாஷிங்மெஷின், எல்.ஈ.டி டிவி, பீரோ, கட்டில், மிக்ஸி, கிரைண்டர், கைக்கடிகாரம் உள்ளிட்ட 50 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:–
மந்திரங்கள் ஏதும் சொல்லாமல், எல்லாருக்கும் புரிகின்றது போல தமிழ்மொழியில் உற்றார், உறவினர் அனைவரும் வாழ்த்தி, உங்களுடைய முன்னிலையில் இவ்வளவு சிறப்பாக இந்த திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முக்கியமாக ஆணும், பெண்ணும் சரி சமமாக அமர்த்தப்பட்டு இன்றைக்கு உங்கள் முன்னிலையில் இந்த திருமண பந்தத்தில் இரண்டு பேரும் இணைகின்றீர்கள்.
இதெல்லாம் ஒரு காலத்தில் சாத்தியமா? என்று பார்த்தால், நிச்சயம் சாத்தியம் இல்லை. நமக்கு புரியாத மொழியில் பேசி, சாதி, மதம், சம்பிரதாயம் எல்லாம் பார்த்து தான் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தது.
இன்றைக்கு இது போன்ற முற்போக்கு திருமணங்கள் நடைபெறுகிறது என்று சொன்னால், அதற்கு முழு காரணம் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் தான். தற்போது முதலமைச்சருடைய உழைப்பு தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம்.
அதுமட்டுமல்லாமல், குறிப்பாக, மகளிரின் பொருளாதாரத்திற்காக நம்முடைய கழக அரசு அமைந்தது முதல் முதலமைச்சர் ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்திக் கொண்டு வருகிறார். நம்முடைய அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கு கட்டண மில்லா பேருந்து திட்டம், விடியல் பயணம் திட்டம். இந்தத் திட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் 625 கோடி முறை பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்தத் திட்டத்தின் வெற்றி. ஒவ்வொரு மகளிரும் மாதம் 800 ரூபாய் முதல் 850 ரூபாய் வரைக்கும் சேமிக்கிறார்கள். பள்ளிப்படிப்போடு நின்று விடக் கூடாது, கல்லூரிக்கு செல்லவேண்டும் என்பதற்காக, அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேர்ந்தால், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம், மாதம் ஆயிரம் உதவித்தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அதேபோல, மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் – அரசுப்பள்ளியில் படித்து, உயர்கல்வியில் சேர்ந்தால், மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
11 தேர்தல்களிலும் வெற்றி
இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத பெருமை, தலைவராக பொறுப்பேற்று, சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் நம்முடைய தலைவர். 2019–-ல் இருந்து கிட்டத்தட்ட 11 தேர்தல்களை சந்தித்திருக்கிறோம். 11 தேர்தல்களிலும் நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் வெற்றியை தேடித் தந்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார் நம் முதலமைச்சர். அதனால் தான், சட்டமன்றம், உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இப்போது மீண்டும் 2026-–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரப் போகிறது. நம் முதலமைச்சர் 234 தொகுதிகளில் குறைந்தது 200 தொகுதிகளில் நாம் வென்று காட்டவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். வெல்வோம் 200 – படைப்போம் வரலாறு என்று சொல்லியிருக்கிறார் என்றால், நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் தான். ஆட்சியின் செயல் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உங்களிடத்தில் இருக்கிறது. அதை நிச்சயமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உடனே குழந்தையை பெற்றுக் கொள்
மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்; உடனே குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ள வேண்டாம். ஒன்றிய அரசு ஜனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தியது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழ்நாடு அரசு. அதனால் நாம் தண்டிக்கப்படுகிறோம். இதற்காக தான் தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதைப்பற்றி முதலமைச்சர் கடந்த 10 நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார். இப்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39. இந்த தொகுதி மறுசீரமைப்பு வந்துவிட்டால் 8 தொகுதி குறைந்து 31 தொகுதியாக மாறிவிடும். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி பேர். ஆனால், குடும்ப கட்டுப்பாட்டை மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தாத மாநிலங்கள் இதனால் பயனடையப் போகிறார்கள். வட மாநிலங்கள் இதனால் 100 தொகுதிகள் வரை பெறப்போகிறார்கள். தொகுதிகள் குறைய, குறைய நம்முடைய உரிமைகளை பெறமுடியாது. மணமக்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க, வாழ்கவென வாழ்த்துகிறேன்.
இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்ரமணியன், மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், அ.வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், செய்தி தொடர்புக் குழு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் கழக நிர்வாகிகள், மணமக்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.