காத்மாண்டு, பிப்.17–
71 பேரை பலிகொண்ட நேபாள விமான விபத்தில் மனித தவறு இருப்பதாக விசாரணை குழுவில் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து விமான விபத்துக்கு விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியின் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து 5 பேர் கொண்ட விசாரணை குழு புதிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது, இந்த விபத்தில் மனித தவறு இருப்பதற்கான காரணியை மறுக்க முடியாது என 5 பேரில் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் படி, விபத்து அல்லது சம்பவத்தை விசாரிக்கும் மாநிலம் விபத்து நடந்த 30 நாட்களுக்குள் ஆரம்ப அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். விபத்து நடந்த 12 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
முதற்கட்ட அறிக்கையின்படி, விமானக் குழுவினர் காலையில் காத்மாண்டு மற்றும் பொக்காரா இடையே இரண்டு விமான பயணங்களை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான விமானம் அதே ஊழியர்களால் தொடர்ச்சியாக மூன்றாவது முறை இயக்கப்பட்டு உள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தரையிறங்க அனுமதி வழங்கியபோது, என்ஜின்களில் பவர் இல்லை என்று இரண்டு முறை கேப்டன் கதிவாடா குறிப்பிட்டார்.
சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், ஜனவரி 1ம் தேதி போதிய ஆயத்தங்கள் இல்லாமல் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது. புதிய விமான நிலையத்தில் முக்கிய தேவையென கருதப்படும் உபகரணங்கள் இல்லை. விமானத்தை சோதிக்கும் கருவிகளும் இல்லை. விமான நிலைய நடைமுறைகள் மற்றும் தரவுகளைப் பற்றி விமான நிறுவனங்களுக்கு மிகக் குறைவான தகவல்களே உள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.