செய்திகள்

700 ஆண்டு பழமையான ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வரும் சித்த மருத்துவர் ஞானசௌந்தரம்

Makkal Kural Official


*மருத்துவம் செய்ய மூலிகைகள் தேவை

*வளர்ப்பதற்கு போதிய இடம் இல்லை

*மூலிகை வளர்க்க தரிசுநிலங்களை தாருங்கள்

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை

தமிழ் மக்களின் பாரம்பரியச் சொத்தான சங்க இலக்கியம் என்கிற பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் நீண்ட நெடுங்காலமாக அறியப்படாமல் மறைந்து கிடந்தது. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர் ஊர் ஊராக சென்று
ஓலைச்சுவடிகளை திரட்டி அவற்றை பதிப்பித்தார்.

இல்லையென்றால் இந்த இலக்கியங்களை வாசிக்கும் பாக்கியம் தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு கிட்டாது போயிருக்கும். சங்க இலக்கியங்கள், காவியங்கள் என 1878ஆம் ஆண்டு தொடங்கி 1942ஆம் ஆண்டு வரை அறுபத்திரண்டு ஆண்டு காலம் 102
நூல்களை உ.வே.சா பதிப்பித்தார். இப்படி ஒரு வரியில் இன்று நாம் எளிதாக எழுதிவிட முடிகிறது.

ஆனால், அன்று உ.வே.சா. இந்த ஓலைச்சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைந்தார். சுவடிகளில் இருந்த வீடுகளின் வாசல்களில் கையேந்தி நின்றார். பலர் கொடுத்தார்கள். பலர் அவமதித்தார்கள். திசைகள்தோறும் சென்று ஏழைக் கவிகளின் வீடுகளிலிருந்து
உ.வே.சா. பழந்தமிழ் ஏடுகளை வெளிக்கொண்டு வந்தார். அக்கவிகளின் வீடுகளே கோயில்கள் என்றும், அங்குள்ள ஏடுகளே விக்கிரகங்கள் என்றும் போற்றினார் உ.வே.சா.அந்த வகையில் 700 ஆண்டு பழமையான ஓலைச்சுவடிகளை பொக்கிஷமென பாதுகாத்து வருகிறார் கோவையை சேர்ந்த பாரம்பரிய சித்த மருத்துவர்
ஞானசௌந்தரம்.

கோவை ஆலாந்துறை நொய்யல் ஆற்றங்கரை கள்ளிப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் ஞானசௌந்தரம் தன்னிடம் இருக்கும் ஓலைச்சுவடிகள் குறித்து ‘மக்கள் குரல்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:–
எனது தந்தை ஓர் மகா சித்தர். 7ஆம் வகுப்பு மட்டுமே நான் படித்திருந்தாலும், எனது தந்தையின் உதவியுடன் ஓலைச்சுவடிகளை படிக்க கற்றுக்கொண்டு அதன் படி சித்த மருத்துவம் செய்ய தொடங்கினேன். சுமார் என்னிடம் 350 சுவடிகள் வரை உள்ளது. 1512ம் ஆண்டு எழுதப்பட்ட ஓலைச்சுவடி கூட இங்கு இருக்கிறது. 500 ஆண்டு பழமையான புலிப்பாண்டியார் எழுதிய மாந்திரீகம், வைத்தியம் மட்டுமல்லாது, 700 ஆண்டு பழமையான மச்சமுனி, அகஸ்தியர் எழுதிய ‘வைத்திய காவியம்’ ஓலை சுவடிகளையும் பாதுகாத்து வருகிறேன்.

4448 வகை வியாதிகள்:

சித்தர்கள் சாஸ்திர பிரகாரம் ஒரு மனிதனுக்கு 4448 வகையான வியாதிகள் வரும். இந்த நோய்கள் அனைத்துக்கும் சித்தர்கள் மருந்து கண்டுபிடித்து வைத்து இருக்கிறார்கள். சுமார் ஏழு தலைமுறைகளாக இந்த ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மனையடி சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், உடற்கூறு சாஸ்திரம், யோகா, ரசவாத கலை, குழந்தைகள் சாஸ்திரம், வைத்திய
சாஸ்திரம், மருந்து சாஸ்திரம், பூஜை, கும்பாபிசேகம் என சகல விஷயங்களும் ஓலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சுவடிகளை பாதுகாக்க…

சரியான பாதுகாப்பு வழிமுறை இல்லாததால் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஏராளமான ஓலைச்சுவடிகள் வீணாக போய்விட்டது. கோவை தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி சத்தியமூர்த்தி மூலமாக சென்னை கீழ்த்திசை ஓலைச்சுவடி நிலையத்தில் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் நேரில் வந்து என்னை சந்தித்து ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து அதனை பாதுகாப்பாக கையாள்வதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தனர்.

ஓலைச்சுவடிகளை ஆயில் வைத்து சுத்தம் செய்து அதனை வரிசை பிரகாரம் முறைப்படுத்தியும் கொடுத்தார்கள. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களே நேரில் வந்து ஆயில் வைத்து ஓலைச்சுவடிகளை சுத்தம் செய்து கொடுக்கின்றனர். ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதே ஒரு சவால்தான். ஓலைகள் சேதமடையாத முறையில் நாள்தோறும் அதனை மென்மையான துணி கொண்டு துடைத்து வைக்க வேண்டும்.

சுருக்க முறையில் வார்த்தைகள்

ஓலைச்சுவடிகளில் காணப்படும் தகவல்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். என்னிடமுள்ள 350 ஓலைச்சுவடிகளையும் படி எடுத்து வருகிறேன். ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளவற்றை தற்கால எழுத்து வடிவத்துக்கு மாற்றி எழுதி வருகிறேன். இதுவரை பல ஆயிரம் பக்கங்கள் எழுதி முடித்து இருக்கிறேன். ஒரு ஓலைச்சுவடியை எழுதி முடிக்க சுமார் ஒன்னேகால் மணி நேரம் ஆகும்.

ஒரு சில ஓலைச்சுவடியில் 13 வரிகள் கூட இருக்கும். அதனை படிப்பது மிகவும் கடினம். அந்த காலத்திலேயே சுருக்க முறையில் எழுதி வைத்து இருக்கிறார்கள். அதனை புரிந்து விரிவாக எழுத வேண்டும்.

கருத்துப்பிழையை தவிர்க்க…
இலங்கையிலிருந்து 50 ஓலைச்சுவடிகள் படி எடுக்க என்னிடம் கொடுத்தார்கள். அதில் ராவணன், ஷியாமளா தேவிக்கான பூஜை வழிபாட்டு முறைகள் குறித்து 300 பாடல்கள் எழுதப்பட்டு இருந்தது. திருச்சியிலிருந்து 100 சுவடிகளை படி எடுக்க கொடுத்தார்கள்.
ஓலைச்சுவடிகளில் இருக்கும் எழுத்து வடிவத்துக்கும் தற்போது இருக்கும் எழுத்து வடிவத்துக்கும் குறைந்தபட்சமே வித்தியாசம் காணப்படும்.

ஓலைச்சுவடிகள் அச்சுப்பிரதியாக வரும்போது ஒரு சில நேரம் கருத்து பிழையுடன் வருவது கவலை அளிக்கிறது. இதனை தடுக்க அனுபவம் வாய்ந்த நபர்கள் உதவியுடன் சுவடி படித்து அச்சில் ஏற்ற வேண்டும்.

முதல்வரின் கவனத்துக்கு…
மாநிலம் முழுவதும் இருந்து இங்கு பயிற்சிக்காக மாணவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மருந்து சாஸ்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓலைச்சுவடிகளில் காணப்படும் மருந்து சாஸ்திரப்படி மருத்துவம் செய்வதற்கு பல்வேறு மூலிகைகள் தேவைப்படுகிறது.

இதற்காக அரசு தரிசு நிலங்களை ஒதுக்கி கொடுத்தால் மூலிகை செடிகளை பயிரிட்டு அடுத்த தலைமுறையினருக்கு ஒரு ஆரோக்கியமான மருத்துவ சிகிச்சை அளிக்க எங்களால் முடியும். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவண செய்ய வேண்டும்
என்பதே எங்களது வேண்டுகோள் என்றார் ஞானசெந்தரம்.

சுவடிகள் இருந்தால் சொல்லுங்கள்: இலவசமாக பராமரித்து தருகிறோம்
ஓலைச்சுவடிகள் பராமரிப்பது தொடர்பாக மாநில சுவடிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் சசிகலா கூறும்போது, தமிழ்நாடு தொல்லியல் துறையின் கீழ் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் மாநில சுவடிகள் குழுமம். அப்போதைய தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள்தான் இந்த திட்டத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வந்தவர். தற்போதும் அவர்தான் இந்த துறையினை வழிநடத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் தனியார் வசம் உள்ள சுவடிகளை பாதுகாத்து கொடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். ஒருவரிடம் ஒரு சுவடி இருந்தால் கூட குக்கிராமம் என்றாலும் அங்கு நேரடியாக சென்று பாதுகாத்து கொடுக்கிறோம். ஒரு சுவடி என்றாலும் அதில் இருக்கும் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், வரலாறு குறித்த தகவல்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுவடி கட்டுகளை பராமரித்து கொடுத்து இருக்கிறோம். தனிமனிதர், நிறுவனங்கள், மடம் என எந்த இடத்தில் சுவடிகள் சேமிப்பு இருந்தாலும் அதனை அரசு தனது சொந்த செலவில்
பராமரித்து தருகிறது. கடந்த காலங்களில் சுவடி திரட்டுதல் போல் அல்லாமல் தற்போது
சுவடி இருப்பிடங்களுக்கே நேரில் சென்று, சுவடி உரிமையாளர்களது முன்னிலையிலேயே சுவடிகளை சுத்தம் செய்து தருகிறோம். இதுதவிர, சுவடிகளின் தரவுகளை மின்னுருவாக்கம் செய்தும் தருகிறோம். முறையாக பராமரிக்கும் போது சுவடிகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். இது தமது குடும்ப சொத்து பற்றிய செய்தி அல்லது புதையல் பற்றிய தகவல் சுவடிகளில் இருக்கும் என்று தவறான கண்ணோட்டம் பரவலாக இருக்கிறது. சுவடி பற்றிய விழிப்புணர்வின்மையால் ஏராளமான சுவடிகள்
பராமரிப்பின்றி வீணாகின்றன. இதனை தவிர்க்க ஊர்கள்தோறும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு பயிலரங்கம் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வரும் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. செல்லரித்த, சேதமடைந்த ஓலைச்சுவடிகளை பாதுகாக்க
இயலாதவர்கள் வருங்கால தலைமுறைக்கு நமது வரலாற்றை கொண்டு செல்லும் வகையில் அரசின் தொல்லியல் துறையிடம் சுவடிகளை ஒப்படைக்கலாம் என்றும், ஊர் கூடி தேர் இழுப்போம் உன்னதமான சுவடிகளை பேணிக்காப்போம் என்றார் சசிகலா. ஓலைச்சுவடிகள் குறித்து தகவல் அளிக்க விரும்புவோர் 9944035740, 8838173385 என்ற எண்ணில் அழைக்கலாம்.

ஷீலா பாலச்சந்திரன்


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *