செய்திகள் போஸ்டர் செய்தி

70 வயது மகன், 66 வயது மருமகள், 29 வயது பேரனுடன் அனுமதிக்கப்பட்ட 99 வயது மூதாட்டி ‘டிஸ்சார்ஜ்’

‘கொரோனா’ வைரஸ் பாதித்து

70 வயது மகன், 66 வயது மருமகள், 29 வயது பேரனுடன் அனுமதிக்கப்பட்ட 99 வயது மூதாட்டி ‘டிஸ்சார்ஜ்’

 

பெங்களூரு, ஜூன். 27–

‘உயிர்க்கொல்லி’ கொரோனா வைரஸ் பாதித்து உறுதி செய்யப்பட்டிருந்த 99 வயது மூதாட்டி மார்சிலின் சல்தான்ஹா, பெங்களூர் அரசு மருத்துவமனையில் 9 நாள் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மூதாட்டியோடு அவரது 70 வயது மகன், 66 வயது மருமகள், 29 வயது பேரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 29 வயது பேரனும் சிகிச்சை முடிந்து, பாட்டியோடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.

மகன், மருமகள், பேரன் மூவரும் காய்ச்சல், தொடர்ந்து வறட்டு இருமல், தொண்டையில் வறட்சி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மார்சிலின், கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. இருந்தாலும் குடும்பத்தினரோடு சேர்ந்து பரிசோதிக்கப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் அவரும் பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜூன் 18 – எனக்கு 99–வது பிறந்த நாள். அன்று தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். துணிச்சலோடு மருத்துவமனையில் இருந்தேன். கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டேன். கொடுத்த உணவையும் சாப்பிட்டேன். 40 வருஷத்துக்கு முன்னால் ஒரு தடவை உடல்நலம் சரியில்லாமல் இருந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அப்போதிருந்த மருத்துவமனை சூழலை நினைவில் வைத்துக் கொண்டு, அய்யோ – அரசாங்க மருத்துவமனையா… என்று பயந்தேன். தயக்கத்தோடு சேர்ந்தேன். ஆனால் இப்போது, அந்த எண்ணத்தை அடியோடு மாற்றி விட்டார்கள்.

டாக்டர்களும், நர்சுகளும். நல்லவிதமாக கவனித்தார்கள். சிறப்பாக சிகிச்சை அளித்தார்கள். இப்போது நான் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறேன். 9 நாளில் குணம் அடைந்தேன். அரசாங்க மருத்துவமனை என்றால் இனி வீண் பயமே வேண்டாம் என்று மக்களுக்குச் சொல்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே கூறினார் மார்சிலின்.

‘‘டாக்டர்கள் சொன்னபடி கேளுங்கள். வேளா வேளைக்கு நன்றாக சாப்பிடுங்கள். மருந்து மாத்திரைகளையும் டாக்டர்கள் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று அறிவுறுத்தினார் அவர்.

‘உயிர்க்கொல்லி’ கொரோனாவுக்கு கர்நாடகத்தில், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகியிருக்கும் மிக அதிக வயதான பெண்மணி மார்சலின் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *