போஸ்டர் செய்தி

70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார்

Spread the love

சென்னை, ஜூன் 13–

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், 81 கோடியே 69 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 51 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் அட்டைகளை வழங்கினார்.

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

கூடுதல் வகுப்பறைகள், ஆய்வக கட்டிடம்

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 30 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 53 கோடியே 84 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர்;

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 21 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 27 கோடியே 84 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள்;

என மொத்தம் 84 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 52 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

ஸ்மார்ட் கார்டுகள்

மேலும், 2019–2020ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணாக்கர்களுக்கு 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணாக்கர்களின் சுயவிபரங்களை பதிவு செய்யும் வசதியுடன் திறன் அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 மாணவ, மாணவிகளுக்கு திறன் அட்டைகளை வழங்கி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக்கண்ணன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *