புதுச்சேரி,ஆக.1–
புதுச்சேரியில் 70 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு
மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கவர்னர் தமிழிசை முன்னிலையில் முதல்வர் ரெங்கசாமி துவக்கி வைத்தார்.
1. 17.3.203 ந் தேதிக்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு
ரூ.50 ஆயிரம் டெபாசிட் வழங்கும் திட்டம்,
2. சிவப்பு, மஞ்சள் ரேசன் கார்டுதாரர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ரூ. 300 , ரூ.150 மான்யம் வழங்கும் திட்டம்
3. 70 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு
மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்
4. ரூ.2 லட்சம் வரை கிடைக்கும் விபத்து காப்பீட்டுத் திட்டம்
ஆகிய 4 திட்டங்களை கவர்னர் தமிழிசை முன்னிலையில் முதல்வர் ரெங்கசாமி துவக்கி வைத்தார். இதற்கான விழா
புதுவை கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
இத்திட்டத்தை தொடக்கி வைத்து முதல்வர் ரெங்கசாமி பேசியதாவது:–
இந்த திட்டங்களை நிறைவேற்ற எந்த புதிய வரியும் போடவில்லை. புதுவை மாநில அரசின் நிர்வாகத்தை சரியாக கொண்டு சென்று மக்கள் மீது எந்த வரியும் திணிக்காமல் பட்ஜெட்டில் அறிவித்த இந்த 4 திட்டங்களையும் சிறப்பாக நிர்வகித்து நிறைவேற்றுகிறோம்.
அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஓரிரு ஆண்டுகளில் 5000 அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
சேதாரப்பட்டடில் 750 ஏக்கரில் மருத்துவப் பூங்கா தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுவை சுதேசி , பாரதி, ரோடியர் பஞ்சாலைகள் இருந்த இடத்தில் புதிய தொழில்கள் தொடங்கப்படும்.
ஏழை எளிய மக்கள் நலத்திட்டங்களை செயல் படுத்துவதில் நாட்டிலேயே புதுவை முதலிடத்தில் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் புதுவை அரசு முதல் 3 இடத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி கூறியபடி புதுவை அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசுக்கான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
17.3.203 ந் தேதிக்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு
ரூ.50 ஆயிரம் டெபாசிட் வழங்கும் திட்டத்துக்கு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளோம். இத்திட்டத்தில் சேரும் பெண் குழந்தைகளுக்கு 18 ஆண்டுக்கு பிறகு கல்வி, திருமணம் ஆகியவற்றுக்கு ரூ. 3 லட்சம் வரை கிடைக்கும்.
சிவப்பு, மஞ்சள் ரேசன் கார்டுதாரர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ரூ. 300 , ரூ.150 மான்யம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.140 கோடி ஒதுக்கியுள்ளோம்.
70 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ரூ. 84 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம்.
ரூ.2 லட்சம் வரை கிடைக்கும் பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.97 லட்சம் ஒதுக்கியுள்ளோம். இத்திட்டத்தில் ஒருவர் சேர்ந்தால் விபத்து காலத்தில் ரூ. 2 லட்சம் வரை கிடைக்கும். அவர் செலுத்தவேண்டிய ரூ 20 கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
இவ்வாறு முதல்வர் ரெங்கசாமி கூறினார்.
இவ்விழாவில் கவர்னர் தமிழிசை , சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள் சாய்சரவணகுமார், தேனி ஜெயக்குமார், சந்திரப்பிரியங்கா, உதவிசபாநாயகர் ராஜவேலு, முதல்வரின் செயலாளர் ஜான்குமார், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.