செய்திகள்

அம்மா மினி கிளினிக்கில் இதுவரை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதலமைச்சர், அமைச்சர்களுக்கு விரைவில் தடுப்பூசி

சென்னை, பிப்.4

முதலமைச்சர் திறந்துவைத்துள்ள அம்மா மினி கிளினிக் மூலம் இதுவரை 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள் என்று சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

அம்மாவின் ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தொற்று நோயை ஒழிக்க முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது. கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களும் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்து கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கினார்.

ஏழை, எளிய மக்கள் அவரவர் பகுதியில் சிகிச்சை பெற வசதியாக 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளில் 872 அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 7 லட்சத்து 34 ஆயிரத்து 951 பேர் சிகிச்சை பெற்று பலன் அடைந்திருக்கிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.

அண்ணா தி.மு.க. உறுப்பினர் செம்மலை எழுந்து பேசுகையில், முதலமைச்சரின் சிந்தனையில் உதித்தது அம்மா மினி கிளினிக். இது ஒரு மகத்தான திட்டம். மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2 ஆயிரம் மினி கிளினிக்குளை முதலமைச்சர் திறந்து இருக்கிறார். இன்னும் இந்த மினி கிளிளிக்குகள் தேவைப்படுகிறது. எனவே தேவைப்படும் இடங்களில், குக்கிராமங்களில் இதனை அதிகப்படுத்த வேண்டும்.

அதேபோல கொரோனா நோய் தடுப்பூசி இப்போது முன் களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களுடன் நேரடி தொடர்பு உள்ளவர்கள். எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும் என்று செம்மலை கேட்டார்.

இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். அம்மா கிளினிக்குகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. எல்லா ஊராட்சிகளிலும் இதுபோன்று மினி கிளினிக் வேண்டும் என்று கேட்கிறார்கள். முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மேலும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 920 கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாவட்டங்களுக்கு 10 லட்சத்து 38 ஆயிரத்து 700 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

நேற்று வரை சுகாதார துறையை சேர்ந்த 5 லட்சத்து 55 ஆயிரத்து 464 பேரும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 681 போலீசாரும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 697 உள்ளாட்சித்துறையை சேர்ந்தவர்களும் மற்றும் 35 ஆயிரத்து 757 வருவாய் துறையை சேர்ந்தவர்களும் என மொத்தம் 8 லட்சத்து 59 ஆயிரத்து 982 பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள கணக்கெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று கலெக்டர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு பலர் தயக்கம் காட்டுகிறார்கள். அதனால் தான் நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் என அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். ஒரு வாரத்தில் பதில் வரும் என்று எதிர்பார்க் கிறோம்.

எல்லா அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். யாரும் பதட்டப்பட தேவையில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு இன்னும் ஓரிரு நாளில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *