சென்னை, மே 4–
7 மற்றும் 8–ந்தேதி 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வரும் 28ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் காணப்படும். இதற்கிடையே, ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7–ந்தேதி தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
8–ந்தேதி தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெயில் 4 டிகிரி அதிகரிக்கும்
அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 41 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். காற்றின் ஈரப்பதம் 30 முதல் 50 சதவீதம் வரை இருக்கும்.
தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
தமிழகத்தில் 5 இடங்களில் அதிகபட்சமாக 107 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. கரூர் பரமத்தி, வேலூர், திருத்தணி – 108.5 டிகிரி, திருப்பத்தூர் – 107 டிகிரி, மதுரை – 106, திருச்சி, சேலம், தர்மபுரி, பாளையம்கோட்டை, மதுரை – 105 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.