செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவு 7.1 டி.எம்.சி.யை எட்டியது

கடந்த ஆண்டை விட 2 மடங்கு இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவு 7.1 டி.எம்.சி.யை எட்டியது

சென்னை, நவ.20-–

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 7.1 டி.எம்.சி.யை தொட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர மக்களுக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் போதுமான மழை இல்லாததால் ஏரிகளில் நீர் சேமிப்பின் அளவு மிக குறைவாகவே இருந்து வந்தது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் தவணைக்கான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கி இருப்பதால் கடந்த சில நாட்களாக 4 ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், மழை தண்ணீரும் ஏரிக்கு வருவதால் ஏரிகளின் நீர்மட்டம் தற்போது 7.1 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது.இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்யும் என்று கணக்கிடப்பட்டு உள்ளதால், ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகள் வழியாக ஏரிகளுக்கு நீர் அதிகளவு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று எதிர்பார்த்தப்படி ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. வரத்து கால்வாய்கள், நீர் தேங்கி இருக்கும் பகுதிகள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை நிலவரப்படி 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி (11.25 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் 7 ஆயிரத்து 137 மில்லியன் கன அடி (7.1 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 ஆயிரத்து 179 மில்லியன் கன அடி (3.17 டி.எம்.சி.) நீர் மட்டுமே இருந்தது.

பூண்டி ஏரிக்கு 670 கனஅடியும், சோழவரம் 69 கன அடி, புழல் 117 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. அதேநேரம் குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 125 கனஅடி, புழல் 140 கனஅடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து 82 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

சராசரியாக மாதம் ஒரு டி.எம்.சி. என்ற அடிப்படையில் தேவை இருக்கும் போது, தற்போது இருக்கும் நீர் சராசரியாக 7 மாத தேவையை பூர்த்தி செய்ய முடியும். இருந்தாலும் வரும் நாட்களிலும் மழை போதுமான அளவு பெய்தால் ஏரிகளின் நீர் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து 2 நாட்களாக ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது. இருந்தாலும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *