செய்திகள்

7 மாதத்தில் 105 லிட்டர் தாய்ப்பால் கொடை: கோவை பெண் சாதனை

கோவை, ஜன. 25–

7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்த கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

தானத்தில் சிறந்த தானம், ‘அன்னதானம்; இரத்த தானம்; உடல் உறுப்பு தானம் என்பதை கடந்து, தற்போது ‘தாய்ப்பால் தானம்’ என்று உருமாறி வருகிறது. தாய்ப்பால் தானம் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலமுடன் வாழ வழிவகை செய்ய முடிகிறது.

எனவே பெண்கள் தங்களுக்கு சுரக்கும் தாய்ப்பாலை தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பிற குழந்தைகளும் நலம் பெற வேண்டும் என்று எண்ணி, அதனை சிலர் தானமாக செய்து வருகின்றனர். சென்னை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் சுமார் 35 தாய்மார்கள், தங்கள் குழந்தைக்கு அளித்தது போக, தங்களிடம் சுரக்கும் பாலை கொடையாக வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. 27 வயதாகும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து அவருக்கு சுரக்கும் தாய்ப்பாலை தனது குழந்தைக்குப்போக மீதம் இருப்பதை கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்து வருகிறார்.

127 லிட்டர் தாய்ப்பால் கொடை

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் தொடர்ந்து 7 மாதங்களாக சுமார் 105 லிட்டர் தாய்ப்பாலை தானமாக ஸ்ரீவித்யா வழங்கியுள்ளார். தொடர்ந்து தாய்ப்பாலை தானமாக வழங்கி வரும் இவர், தற்போது வரை 127 லிட்டர் வரை தானமாக வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீவித்யா தற்போது ‘ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம் பெற்றுள்ளார். ஸ்ரீவித்யாவின் தாய்ப்பால் தானத்தால் இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக இதே கோவை மாவட்டம் கணியூர் பகுதியைச் சேர்ந்த சிந்து மோனிகா (வயது 29) என்ற இளம்பெண் ஒருவர் குழந்தை பிறந்து 100-வது நாட்களில் இருந்து தொடர்ந்து 19 மாதங்களாக சுமார் 55,000 மி.லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளார். இதன்மூலம் 1,500 பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இவரது இந்த செயலை சாதனையை அங்கீகரிக்கும் விதமாக ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவரை கெளரவித்தது என்பது குறிப்பித்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *