செய்திகள்

7 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்

Spread the love

சென்னை, ஜூலை 20

உளுந்தூர்பேட்டை சண்முகம், கவிஞர் நா.காமராசு, புலவர் இறைக்குருவனார் உள்ளிட்ட 7 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ் வளர்ச்சித் துறையில் அறிவிப்புகளை வௌியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

* வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழறிஞர்களுக்கு புதிய விருதுகளையும், நிதியுதவிகளையும் வழங்கி வந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசும், இது வரை 149 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, அவர்தம் மரபுரிமையாளர்களுக்கு பரிவுத் தொகை வழங்கியுள்ளது. அவ்வரிசையில் இவ்வாண்டு,

1. உளுந்தூர்பேட்டை சண்முகம்

2. கவிஞர் நா. காமராசு

3. முனைவர் இரா. இளவரசு

4. தமிழறிஞர் அடிகளாசிரியர்

5. புலவர் இறைக்குருவனார்

6. பண்டித ம. கோபால கிருட்டிணன்

7. பாபநாசம் குறள்பித்தன்

ஆகியோரின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படும். இதற்கென 35 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1ம் நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

* வாரணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம், 36 லட்சம் ரூபாய் தொடர் செலவினத்தில் தோற்றுவிக்கப்படும்.

* உலக அற இலக்கியமான திருக்குறளின் பெருமையை பரவச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலகமொழி ஆகியவற்றில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும். இதற்கென தொடர் செலவினமாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான ஈப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

* திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட ஐரோப்பிய தமிழறிஞர் டாக்டர். ராபர்ட் கால்டுவெல் அவர்களின் சீரிய தமிழ்ப் பணியினைப் போற்றி சிறப்பிக்கும் வகையில், அன்னாரின் நெறியில் ஒப்பிலக்கண ஆய்வில் தமிழறிஞர்களையும் மாணவர்களையும் நெறிப்படுத்தவும், திராவிட மொழிகளை ஒப்பிட்டு தொடர்ச்சியாகப் பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளவும், தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்” பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென வைப்புத் தொகையாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித் திட்ட”த்தின் கீழ், முதன்முறையாக தமிழ் பல்கலைக்கழகத்தில் 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *