அறிவியல் அறிவோம்
கனடா நாட்டின் ஆல்பர்ட்டாவின் பேட்லேண்ட்ஸில் உள்ள ஹார்ஸ்ஷூ கேன்யன் (Horseshoe canyon) பகுதியில் ஒரு பாதுகாப்புத்தளம் (conservation site) இருக்கிறது. இந்தக் கோடையில் தன் அப்பா டியோனுடன் அங்கு நடைப்பயணம் மேற்கொண்ட நாதன் சிறிதாக வெளியே தென்பட்ட டைனோசர் புதைபடிமத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
நாதன் இருஷ்கின் தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு பழங்கால ஆராய்ச்சியாளராக விரும்பினார். மேலும், 12 வயதே ஆன சிறுவன் அந்தத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
இது குறித்து “டைனோசரின் எலும்புகளைக் கண்டுபிடித்தது ஒரு டைனோசரையே கண்டுபிடித்தது போன்று மிக ஆச்சரியமாக இருந்தது” என்று கூறினார். இப்படி எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பது சிறிது காலமாகத் தனது கனவாகவே இருந்தது என்றும் நாதன் கூறியுள்ளார்.
கனடாவின் நேச்சர் கன்சர்வன்சியின் (என்சிசி) செய்தி வெளியீட்டின்படி, இது சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு டக்-பில்ட் டைனோசர் (Duck billed dinosaur) வகையைச் சார்ந்தது. நான்கு வயதே ஆன ஓர் இளம் ஹாட்ரோசரின் (Hadrosaur) மேற்கையின் நீண்ட எலும்பு புதைபடிமமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
கேல்கரியில் (calgury) ஏழாம் வகுப்பு படித்து வரும் நாதன், தன் தந்தையுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து இந்தத் தளத்தை அடைந்துள்ளார். அங்குள்ள குன்றுகளில் நடைப்பயணம் செய்த அவர்கள் ஒரு குன்றின் அடியில் சில எலும்புகளைக் கண்டனர். அவைகள் மழைநீரால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கருதினர். பின் மதிய உணவை முடிப்பதற்காக அமர்ந்த பொழுது அருகிலிருந்த குன்றின் மீது ஏறிய நாதன் “அப்பா சீக்கிரம் எழுந்து இங்கே வாங்க’’ என்று கூப்பிட்டான். மிகவும் உற்சாகமான குரலில் என்னை அழைத்ததிலிருந்தே அவன் எதையோ பார்த்திருக்கிறான் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்” என்று கூறினார்.
தாங்கள் கண்டுபிடித்த எலும்புகளின் புகைப்படங்களை ராயல் டைரெல் மியூசியம் ஆஃப் பேலியண்டாலஜிக்கு அனுப்பி வைத்தனர். புதைபடிமத்தை (Fossil) அடையாளம் கண்டுகொண்ட அருங்காட்சியகம், நிபுணர்கள் குழு ஒன்றை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்தக் குழுவினர் சுமார் இரண்டு மாதங்களாக அந்த இடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், மூன்று அல்லது நான்கு வயதுடைய ஒரே ஹாட்ரோசரில் இருந்து 30 முதல் 50 எலும்புகள் வரை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.