செய்திகள்

7வது மெகா தடுப்பூசி முகாம்: நேற்று 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை, அக்.31-

தமிழகத்தில் நேற்று நடந்த 7வது மெகா முகாமில் 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் நேற்று 7-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது.

தமிழக அரசிடம் கையிருப்பில் இருந்த 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இந்த மெகா முகாமுக்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நேற்று முழுவதும் நடைபெற்ற 7வது மெகா தடுப்பூசி முகாம்களில் 6 லட்சத்து 26 ஆயிரத்து 955 பேர் முதல் தவணையும், 10 லட்சத்து 87 ஆயிரத்து 156 பேர் 2வது தவணையும் என மொத்தம் 17 லட்சத்து 14 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் நேற்று 1,600 சிறப்பு கொரோனா முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் மூலம் 47 ஆயிரத்து 652 பேர் முதல் தவணையும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 197 பேர் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 7 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ந்தேதி நடைபெற்ற முகாமில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 1 கோடியே 49 லட்சத்து 72 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றதால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி முகாம்கள் எதுவும் இயங்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *