செய்திகள்

7வது முறையாக ‘தி.மு.க. ஆட்சி அமைய உறுதி ஏற்போம்’: நிர்வாகிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

Makkal Kural Official

இளைஞரணி செயலாளராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு

சென்னை, ஜூலை.5-

தி.மு.க. இளைஞரணி செயலாளராக பதவியேற்று உதயநிதி ஸ்டாலின் 7ம் ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தார். இதையொட்டி அவர் தி.மு.க. ஆட்சி 7வது முறை அமைவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று இளைஞரணி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணி செயலாளராக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவியை ஏற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்து நேற்று 7ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். திராவிடக் கருத்தியலை மனதில் ஏந்தி தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், தி.மு.க.வை வலுப்படுத்திடும் வகையிலும், தலைவரின் சொல்லை செயலாக்குகிற பொறுப்பை உணர்ந்தே ஒவ்வொரு பணியையும் இளைஞரணி சார்பில் மேற்கொண்டு வருகிறோம். கடந்த 6 ஆண்டுகளில் நீர்நிலைகளை தூர்வாரியது முதல் கொரோனா காலத்தில் ஆற்றிய சேவைகள் என தொடரும் மக்கள் பணிகள் ஒரு பக்கம், தேர்தல் பரப்புரைகள், பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்ட களங்கள் என அடுக்கடுக்கான கட்சி பணிகள் மறுபக்கம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அடித்தளத்தில் இருந்து வலிமையான கட்டமைப்போடு இளைஞரணி இன்று மிக நேர்த்தியாக உருவெடுத்துள்ளது. இன்றைக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களோடு தி.மு.க.வின் ராணுவமாய்த் திகழ்கிறது நம் இளைஞர் அணி. ஏதோ உட்கார்ந்த இடத்தில் இருந்து நிரப்பப்பட்ட பொறுப்புகள் அல்ல, இந்தப் பொறுப்பாளர்களை நியமிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை நாமே நேர்காணல் செய்திருக்கிறோம்.நமது தலைவரின் கட்டளையை ஏற்று, 17 ஆயிரம் பேர் பங்கேற்ற ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியை நடத்தி தி.மு.க.வுக்கு 242 இளம் பேச்சாளர்களை கண்டறிந்து தந்திருக்கிறது நம் இளைஞர் அணி.

இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிட்டது. அதுபோல, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தர இளைஞரணி இப்போதே தயாராகிவிட்டது. மத்திய அரசு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டுக் குடும்பங்களை அணிசேர்க்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை வெற்றியடையச் செய்ய அயராது களப்பணி ஆற்றும் இளைஞர் அணித் தோழர்கள் தான் என்னை ஊக்குவிக்கும் உற்சாகம்.இந்த நேரத்தில் என் தோளோடு தோள் நிற்கும் இளைஞர் அணி நிர்வாகிகள்-தம்பிமார்கள் அத்தனைப் பேருக்கும் என் நன்றிகள். இளைஞர் அணிச் செயலாளராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளில், நம் தி.மு.க.வை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *