முழு தகவல்

7ம் அறிவில் 7–ஆம் வகுப்பு விவேகா;

வண்ணம் சொல்லும் கைகள்!

கண்ணால் தான் இந்த உலகை நம்மால் காண முடியுமா? இல்லை கண்ணால் நாம் காண்பது தான் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சாதனை சிறுமி விவேகா

இப்படி நினைப்பவர்களை தவறாக்கி, கண்களால் அல்லாமல், தன் கைகளால் நிறங்களையும், ரூபாய் நோட்டுகளின் குறியீடு எண்களையும் தொட்டுப்பார்த்து, சரியாக கண்டுபிடித்து சொல்லி அனைவரையும் வியப்பிலாழ்த்தி வருகிறார் 12 வயது சிறுமி விவேகா.

வறுமையில் கற்ற கலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இந்த சாதனை சிறுமி- விவேகா. தன் தாய் கிருஷ்ணவேணியுடன் மக்கள் குரல், டிரினிட்டி மிரர் நாளிதழ்களுக்கு அளித்த சிறப்புத் தொலைபேசி வழிநேர்காணலில் கூறியதாவது:

”நான் திருச்செங்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டேன். மிகவும் வறுமையில் வாடும் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற, எனது தாய் இந்த ஊரிலேயே சிறு சிறு பணிகளுக்குச் செல்வார்.

நான் 3ஆம் வகுப்பு படித்த பொழுது, என் தாயால் குடும்ப வறுமையைத் தனியாகக் கையாள முடியவில்லை. அவருக்கு உதவியாக எதையாவது செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்த எனக்கு, ஒரு சகோதரர் வழியாக, மூளையின் திறனை மேம்படுத்தி, தொடுதல், முகர்தல் போன்ற உணர்ச்சிகளைக் கொண்டு, கைகளையும் மூக்கையும் வைத்து நிறங்களை கண்டுபிடிக்கலாம் என்பது தெரியவந்தது.

ஒருவேளை இதனை நான் சரியாக செய்துவிட்டால், அதைப் பார்வையாளர்கள் முன்னே செய்து காட்டி வருமானம் கூட ஈட்டலாம் என்றார். ஆனால் அதற்கு என் மூளையின் திறன் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும்.”

வகுப்பை ஒரே மாதத்தில் முடித்து சாதனை

”பொதுவாகவே என் நினைவாற்றலுக்காகவும், தெளிவாகப் புரிந்துகொள்ளும் திறனுக்காகவும் ஆசிரியர்களிடையே பாராட்டுகளை பெற்ற நான், அந்த தன்னம்பிக்கையுடன் என் மூளையின் திறனை அறிந்துகொள்ள கோவைக்குச் சென்றேன். அங்கே தேர்ச்சி பெற்றதால், என்னை அந்த வகுப்பில் சேர்த்துக் கொள்ளக் கட்டணம் செலுத்தச்சொன்னார்கள். என் ஆசிரியர்களின் உதவி மற்றும் நன்கொடைகள் மூலம் அந்த வகுப்பில் நான் சேர்ந்து, ஒரு ஆண்டு வரை எடுத்துக்கொள்ளும் இந்த வகுப்பை, ஒரு மாதத்திலேயே முடித்துக்காட்டி அனைவரையும் வியப்படையச் செய்தேன். அதற்காகப் பயிற்சி வகுப்பினர் நான் செலுத்திய கட்டணத்தொகையில் பாதியை எனக்கு பரிசாக திருப்பி அளித்தனர்.

கண்களாக மாறிய கைகள்

பல பயிற்சிகளுக்கு பிறகு மக்கள் கூட்டங்களுக்கு நடுவில் என் திறனை வெளிப்படுத்தத் துவங்கினேன். கண்களைக் கட்டிக்கொண்டு என் கைகளாலும் மூக்கினாலும் என்னால் நிறத்தைக் கூற முடியும். என் உணர்ச்சிகளையும் நினைவாற்றலையும் அதிக கவனத்துடன் ஓர் திசையில் செலுத்துவதால், என்னால் அதைச் செய்ய முடிந்தது. அதைக்கண்டு வியப்படைந்த பார்வையாளர்கள் பலர், நன்கொடைகள் வழங்கினர். அதன்பின் வேறு பல மக்கள் கூட்டங்களிலும் என் திறனை வெளிக்காட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் அதில் வரும் நன்கொடைகள் வறுமையிலிருந்து முற்றிலுமாக எங்களைக் காத்துக்கொள்ள வழிவகுக்கவில்லை. வறுமையின் பிடியிலிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள இன்னும் நாங்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்.

”நான் என் பள்ளியின் அடையாளம்”

எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக நான் நினைப்பது, என் பெயருடன் என் பள்ளிப் பெயரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது தான். என் பள்ளிக்கு நான் ஒரு அடையாளமாக மாறினேன். இன்றளவும் அந்த காணொலிகளைக் காணும் போது நான் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பேன்.”

வறுமையினால் தவறிய வாய்ப்புகள்

”கண்களைக் கட்டியவாறு நிறங்களையும், ரூபாய் நோட்டுகளின் குறியீடு எண்களையும் கண்டுபிடிக்கும் என் திறனைப் பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் செங்கல்பட்டில் வழங்கப்பட்ட அப்துல் கலாம் கனவு மாணவர் விருது. அதை வாங்கச் செல்வதற்கான போக்குவரத்து கட்டணமில்லாததால், நாங்கள் அந்த விழாவிற்குச் செல்லவில்லை. அதன்பின்னர் எங்களின் பொருளாதார நிலை அறிந்து, அவர்களே எங்களை அழைத்துச்சென்று, மற்றொரு விழாவில் எனக்கு விருதளித்துப் பாராட்டினர்.

”வாழ்வின் குறிக்கோள்”

தாய் கிருஷ்ணவேணியுடன் விவேகா

என் அம்மாவை நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் பார்த்துக்கொள்வது தான் எனது வாழ்வின் குறிக்கோள். அதுமட்டுமின்றி நான் ஒரு ஆசிரியராக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். என் தந்தையின் பெயரில் ஒரு கல்விக்கூடம் நிறுவி, என்னைப் போன்று வறுமையில் வாடும் மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி தருவேன் என்கிறார் விவேகா”.

தன் திறமையின் மூலம் வறுமை இருளின் நடுவில் வண்ணங்களைக் காணும் விவேகா மேன்மேலும் வெற்றிகளை பெற, மக்கள் குரல் நாளிதழ் வாழ்த்துகிறது.

”திருச்செங்கோட்டில் இருக்கும் எக்ஸ்ரே கண்கொண்ட அதிசய சிறுமி” என்று இதே சிறுமியைப் பசுமை இந்தியா மாத இதழ் பாராட்டியுள்ளது. இந்நிலையில் பல்வேறு ஊடகங்களின் சங்கிலித் தொடர் பாராட்டுக்கள் இவருக்குக் குவிந்து வருகிறது.

–சுப்ரிஜா சிவக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *