செய்திகள்

இந்த ஆண்டு 1,12,876 தனிவீடுகள், 65,290 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்

சென்னை, பிப்.14–

இந்த ஆண்டு 1,12,876 தனிவீடுகள், 65,290 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்றும், திருநெல்வேலி, காரைக்குடி, தஞ்சாவூர், பள்ளிப்பாளையம்,

திண்டுக்கல், தேனியில் துணை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவான, தமிழ்நாட்டில் குடிசை இல்லாத நகரங்கள் உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 2014–15 ஆம் ஆண்டு முதல் ‘பிரதம மந்திரி வீட்டுவசதித் (நகர்ப்புரம்) திட்டத்தின்’, பயனாளிகள் தாமாக தனி வீடுகள் கட்டும் பிரிவின் கீழ் 16,774.77 கோடி ரூபாய் செலவில் 5,53,244 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இத்துடன், வாங்கும் திறனுக்கேற்ப கூட்டுமுயற்சி வீட்டுவசதி பிரிவின் கீழ், 1,32,900 அடுக்கு மாடி குடியிருப்புகளை 13,677.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கும் மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 2020–21 ஆம் ஆண்டில், 1,12,876 தனி வீடுகள் மற்றும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்குமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ‘பிரதம மந்திரி வீட்டுவசதித் (நகர்ப்புரம்) திட்டத்திற்காக’ 3,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டுவசதி துறைக்கு ரூ.169.20 கோடி

சென்ற 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உலக வங்கியின் தலைமையகத்தில் அதன் உயர்நிலை நிர்வாகிகளை நாங்கள் சந்தித்த பின்னர், தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி துறைக்கு உலக வங்கியிடம் கோரியிருந்த நிதியுதவிக்கான ஒப்புதல் இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு நிதி வசதிகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதித் துறை வலுவூட்டல் திட்டத்தின் கீழ், கொள்கை சீர்திருத்த நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்துதல், சமூகத்தில் உள்ள அனைவரும் பயனடையும் வகையில் திறமையாகச் செயல்படும் ஒரு வீட்டுவசதி சந்தையை உருவாக்கல், பொதுத் துறையில் ஏழை எளியோர்க்கு வீடுகள் கட்டித் தரவும் வகை செய்யும். இத்திட்டத்திற்கான வளர்ச்சிக் கொள்கை வடிவமைப்பு நிதியாக 45 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட நிதியுதவியாக 20 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்படும். முதலீட்டுத் திட்டங்களுக்கான நிதி வசதியின் கீழ், 504 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் செயல்படுத்தப்பட உள்ள, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம், 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும். 2020–21 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்கென 169.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6 துணை திட்டங்கள்

ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 கோடி அமெரிக்க டாலர் கடனுதவியுடன், 5,000 கோடி ரூபாய் (71.5 கோடி அமெரிக்க டாலர்) மொத்த மதிப்பீட்டுச் செலவில், ‘நகர்ப்புர ஏழை எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டத்தின்’ கீழ், வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புள்ள நீர்வழிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்போர், நகர்ப்புர ஏழை மக்கள் மற்றும் இடம்பெயர்ந்த பணியாளர்களுக்கு வீட்டுவசதியும், மண்டலத் திட்டமிடல் பணிகளும் 2020–21 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் முதற்கட்டமான 21.5 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருநெல்வேலி, காரைக்குடி, தஞ்சாவூர், பள்ளிப்பாளையம், திண்டுக்கல் மற்றும் தேனியில் 431 கோடி ரூபாய் செலவில் ஆறு துணை திட்டங்கள் உடனடியாகச் செயல்படுத்தப்பட உள்ளன. 2020–21 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக, வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 171 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உறைவிடக் கட்டணம்

இரண்டடுக்கு கொண்ட தமிழ்நாடு உறைவிட நிதியானது, நகர்ப்புர வாங்கத்தக்க வீட்டுவசதித் திட்டங்களுக்கு முதலீடு பெற்றுத் தருவதற்கு உருவாக்கப்பட்ட, இந்தியாவில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய முதல் முதலீட்டு நிதியம் ஆகும். 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு உறைவிட நிதிய விதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்நிதியம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டுமானத் திட்டங்களுக்கு விதிக்கப்படும் உறைவிடக் கட்டணங்களை இந்நிதியத்தில் சேர்க்க இவ்விதிகள் வகை செய்கின்றன. உறைவிட நிதியின் இரண்டாம் அடுக்கு, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட, முதல் வகை சமூக மாற்று முதலீட்டு நிதியமாகும். உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி, முறையே 245 கோடி ரூபாய் மற்றும் 700 கோடி ரூபாய் முதலீட்டை, வாங்கத்தக்க வீட்டுவசதித் துறை வளர்ச்சிக்காக அளிக்க உறுதியளித்துள்ளது. 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இதற்காக 205.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு பொது உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நில வசதி தேவைப்படுகிறது. பல நேரங்களில், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட பின்னர், நில மதிப்பில் ஏற்படும் உயர்வின் பலனை, நிலம் வழங்கியவர்கள் பெற இயல்வதில்லை. 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை கொண்டு வந்து, வளர்ச்சி உரிமைகள் பரிமாற்றத் திட்டம் மற்றும் நிலத்திரட்டுப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்ற இரண்டு மாற்றுவழி திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.

அரசின் திட்டங்களுக்கு நிலம் வழங்குபவர்கள், நிலத்தின் மீதான தங்களின் சில உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதையும், அதன் மூலம் புதிய உட்கட்டமைப்புத் திட்டத்தினால் நிலத்தின் மதிப்பில் ஏற்படும் உயர்வின் நியாயமான பலன்களைப் பெறுவதையும் இந்த இரு திட்டங்கள் உறுதி செய்கின்றன. நில உரிமையாளர்கள், நில மேம்பாட்டில் பங்குதாரர்களாக உருவெடுக்கும் இத்திட்டங்களினால், உட்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை விரைவாகத் திரட்ட இயலும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *