சென்னை, ஆக. 16–
சென்னை அப்போலோ மருத்துவமனை நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தில் சிறந்து விளங்கும் வகையில் 6,000-க்கும் அதிகமான ரோபோடிக் மருத்துவ நடைமுறைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறது.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர். பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:–
“அப்போலோ 6,000-க்கும் அதிகமான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது என்ற எளிதில் நம்பமுடியாத இந்த மைல்கல்லை எட்டியிருப்பதில் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இது எங்களிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருத்துவக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருவதில் நாங்கள் எந்தளவிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
அப்போலோ மருத்துவமனைகளில் உள்ள எங்களது மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அவர்களின் கடின உழைப்பும், நிபுணத்துமிக்க திறமையுமே இந்தச் சாதனையை சாத்தியமாக்கி இருக்கிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சையானது, எங்களுடைய மருத்துவ சேவைகளை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது. எங்களிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு சிறப்பான பலன்களையும், குறுகிய காலத்தில் மீண்டு வரும் வாய்ப்புகளையும் அளித்துள்ளது. அப்போலோ இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான தரத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது”.
இவ்வாறு அவர் கூறினார்.
ப்ரீத்தா ரெட்டி
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறியதாவது:–
“சென்னை அப்போலோ மருத்துவமனைகளில் உள்ள எங்களது பன்நோக்கு மருத்துவ துறைக் குழுவைப் பற்றி நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்களது ஆழ்ந்த நிபுணத்துவம் மற்றும் உயரிய அர்ப்பணிப்பு இந்த சாதனையை சாத்தியப்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாங்கள், எங்கள் நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பை வழங்குவதற்கும், எங்களுடைய திறன்களை மேம்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்.’’ என்றார்.
சென்னை அப்போலோ மருத்துவமனைகள் மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. மேலும், இந்தியா மட்டுமின்றி அதற்கு அப்பாலும் சிறந்த சுகாதாரத்திற்கான வரையறைகளை உருவாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அப்போலோ மருத்துவமனை தனது ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை மேம்படுத்துவதற்கும், மருத்துவ கண்டுபிடிப்புகளில் புதிய எல்லைகளை வெற்றிகரமாக தொடவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.