செய்திகள்

தமிழகத்தில் 6.27 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து பூரண குணம்

சென்னை, அக்.17–

தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரத்து 703 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 89 ஆயிரத்து 497 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,631 ஆண்கள், 1,758 பெண்கள் என மொத்தம் 4,389 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 29 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 200 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,140 பேரும், கோவையில் 387 பேரும், செங்கல்பட்டில் 261 பேரும், சேலத்தில் 244 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருந்தாலும் கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 79 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 208 ஆண்களும், 2 லட்சத்து 68 ஆயிரத்து 951 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 32 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 25 ஆயிரத்து 39 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரத்து 767 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 20 பேரும் என 57 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 10,529 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 245 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,185 பேரும், கோவையில் 913 பேரும், செங்கல்பட்டில் 322, சேலத்தில் 314 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 703 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 40 ஆயிரத்து 959 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்க அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13–ந்தேதி சென்னையிலிருந்து சேலத்துக்குப் புறப்பட்டார்.திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் முதல்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அமைச்சருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *