தோகா, டிச. 7–
6–1 கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய போர்ச்சுக்கல் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று போர்ச்சுகல் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த இப்போட்டியில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக, 21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் அறிமுக வீரராக களம்கண்டார். ஆட்டம் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் வசம் இருந்தாலும், அறிமுக வீரர் ராமோஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, போர்ச்சுகல்லின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 17வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கால்பந்து உலகில் ராமோஸ் தனது முத்திரையை பதிவு செய்தார். போர்ச்சுகல்லின் மற்றொரு வீரர் பெப் 33-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 2-–0 என சுவிட்சர்லாந்தை காலி செய்தார்.
இரண்டாவது பாதியிலும் தொடர்ந்த போர்ச்சுக்கல்லின் ஆதிக்கத்தில் ராமோஸ் 51-வது நிமிடம் மற்றும் 67-வது நிமிடம் இரண்டு கோல்கள் அடித்து அசரவைத்தார். அதேபோல், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், பேல் லியோ 92-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தாலும் ஆட்ட நேரம் முடிந்தது. இதனால், இறுதியில், போர்ச்சுக்கல் 6–-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.