செய்திகள்

6–ம் கட்ட தேர்தல்: லக்னோ தொகுதியில் இன்று ராஜ்நாத் சிங் வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி, ஏப். 29–

6–ம் கட்ட தேர்தலில் போட்டியிட லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங், அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணி ஆகியோர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி ஏப்ரல் 19ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 26ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. தற்போது 3ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

மே 7ந்தேதி 94 தொகுதிகளுக்கு 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 4-ம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு மே 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான மனு தாக்கல் இன்று (திங்கட் கிழமை) நிறைவு பெறுகிறது.

இதற்கிடையே மே 20ந் தேதி 49 தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல் கடந்த 26ந் தேதி தொடங்கியது. வருகிற 6ந்தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

இதையடுத்து 6ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. 6-ம் கட்ட தேர்தல் மொத்தம் 57 தொகுதிகளுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று தொடங்கியது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லக்னோ தொகுதியில் போட்டியிட இன்று மனுதாக்கல் செய்தார். அவருடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் ஊர்வலமாக கலெக்டர்கள் அலுவலகத்துக்கு வந்து மனுவை தாக்கல் செய்தனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் லக்னோ தொகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேதி தொகுதியில்

ஸ்மிருதி ராணி

உத்தர பிரதேச மாநிலம், அமேதி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரசின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில், கடந்த 2014ம் ஆண்டு ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ராணி தோல்வியைத் தழுவினார். ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுலை சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். தற்போதைய தேர்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சாாபில் மீண்டும் ஸ்மிருதி ராணி களம்காண்கிறார். அதேநேரம், இத்தொகுதிக்கு காங்கிரசின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கு ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மனு தாக்கல் செய்ய மே 6-ந்தேதி கடைசி நாளாகும். 7-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 9-ந்தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். மே மாதம் 25ந்தேதி 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்படும். 6-ம் கட்ட தேர்தலில் அரியானாவில் 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அதுபோல டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்று தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளில் 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *